உலக நாடுகள் முழுவதும் கோவிட்-19 எனும் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். மத்திய அரசு இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயின்று வருகின்றனர். கோவிட்-19 பீதியால் அந்த நாட்டின் அரசு, கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.
இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தாயகம் வருவதற்காக விமானம் மூலம் மலேசியா வந்தனர். அப்போது, அங்கிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு விமானம் இல்லாமல் கடந்த 18 மணி நேரமாக அங்கு தவித்து வருகின்றனர்.
மலேசியாவில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் பின்னர் இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் நல்லம்மாள்புரத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் என்பவர் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷைச் சந்தித்து மலேசியாவில் தவித்து வரும் மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க:மலேசியாவிலிருந்து தமிழ்நாடு வந்தவருக்கு கொரோனா? - திருவள்ளூர் ஆட்சியர் விளக்கம்