தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதிமுக-காங்கிரஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது' - கே.எஸ். அழகிரி - இடைத்தேர்தல்

நெல்லை: மதிமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்றும் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது குறித்து தோழமைக் கூட்டணி கட்சியினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.

ks-alagiri

By

Published : Sep 6, 2019, 2:40 PM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மூத்த தலைவர்கள் ஹெச். வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும், உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, மோடி தலைமையிலான அரசு ப. சிதம்பரம் மீது ஜனநாயக விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது என்றார். அவரை கைது செய்ய வேண்டும் என்பதே அரசின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது என்றும் அதன் மூலம் அவர்கள் காங்கிரஸ் கட்சியை பலவீனப் படுத்தவேண்டும் என செயல்படுவதாகவும் சாடினார். காங்கிரஸ் கட்சியை குறி வைத்து செய்யும் செயல்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்துக்கே கலங்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

கே.எஸ். அழகிரி செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், தங்களுடைய கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி எனவே கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சியினருடன் கலந்து பேசி நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்போம் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும் மதிமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது எனவும் விளக்கமளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தலில் திமுகவை வெற்றி பெறவைப்பது தங்கள் கடமை எனக் கூறியிருப்பது அனைத்தையும் உள்ளடக்கியது என்றார்.

காங்கிரஸ் கட்சியினர் திகார் சிறையில்தான் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டி இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போர், இதற்காக காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தை திகார் சிறையில் நடத்த தயாராக இருக்கிறோம் என்றார். தாங்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் கூட்டத்தை நடத்தியவர்கள் என்பதால் இதற்காக சிறை செல்ல அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details