திருநெல்வேலி: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் புலி தேவன் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால் குடங்கள் சுமந்தபடி வந்து அவரது திருவுருவச் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்தும் மலர் தூவியும் வழிப்பட்டனர்.
இந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த இளைஞர்களில் ஒரு சிலர், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து, அதன் மேல் ஏறி ஆட தொடங்கினர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட போது இளைஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.