திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி. இவரது கணவர் வாசுதேவன் ஆட்டோ ஓட்டிவருகிறார்.
ஊருக்கு நல்லது செய்யும் சிவசக்தி
சிவசக்தி குன்னத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2012ஆம் ஆண்டுமுதல் ஊராட்சி களப்பணி பொறுப்பாளர், 100 நாள் வேலைத்திட்ட அலுவலர், மகளிர் சுய உதவிக்குழு கணக்காளர் போன்ற பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்துவந்துள்ளார்.
தான் பார்க்கும் வேலையால் முடிந்தவரை கிராம மக்களுக்குப் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிவசக்தி பணிபுரிந்துவருகிறார். குன்னத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ஏழு குக்கிராமங்களில் 22-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்த ஊராட்சியை குடிசைகள் இல்லாத பகுதியாக மாற்ற பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் வீடுகள் கிடைக்க சிவசக்தி நடவடிக்கை எடுத்துவருகிறார். இதன்மூலம் சுமார் 72 பேர் பிரதமர் மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட வற்புறுத்தல்
அதேபோல் குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை சிவசக்தி செய்து கொடுத்துள்ளார். இதற்கிடையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியானதை அடுத்து நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் இருக்கும்போதே தங்களுக்கு நல்லது செய்யும் சிவசக்தி பஞ்சாயத்துத் தலைவர் ஆனால் நிச்சயம் மேலும் நமது கிராமம் முன்னேற்றம் அடையும் என்பதை அறிந்து சிவசக்தியை தேர்தலில் போட்டியிடும்படி ஊர் பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளனர்.
முதலில் தயங்கிய சிவசக்தி தற்போது குன்னத்தூர் ஊராட்சி மன்றத்துக்குத் தலைவராகப் போட்டியிடுகிறார். அவருக்குத் தேர்தல் ஆணையம் ஏணி சின்னம் ஒதுக்கியுள்ளது. இதற்கிடையில், சிவசக்தி தற்போதுதான் பார்த்துவரும் வேலையை ராஜினாமா செய்துள்ளார். சிவசக்திக்கு ஆதரவாகவும் அவரை வெற்றிபெறச் செய்திடும் முனைப்பிலும் கிராம மக்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
சிவசக்தி எங்கள் நம்பிக்கை
இது குறித்து குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் கூறுகையில், "சிவசக்தி பஞ்சாயத்தில் இருந்தபோது எங்கள் ஊருக்கு ஏராளமான நல்ல திட்டங்களைச் செய்து கொடுத்துள்ளார். குறிப்பாக எங்கள் பகுதியை கழிவறைகள் இல்லாத வீடு இல்லை என்று மாற்றிகொடுத்துள்ளார்.