திருநெல்வேலி: தமிழ்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்று. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 91 உறுப்பு கல்லூரிகள் 6 பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் 3 மனோ கல்லூரிகள் செயல்படுகின்றன. தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
முறைகேடு:இந்நிலையில், சமீப காலமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள் பணி நியமணத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யப்பட்டு, இதுதொடர்பாக காவல்துறையினர் பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சமீபத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய நூலை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற சூழலில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரில் தொடங்கி பதிவாளர், நிதி அலுவலர், தொலைதூர கல்வி இயக்குனர் எனப் பல்வேறு முக்கிய பதவியில் இருப்பவர்கள் பணி காலம் முடிந்த பிறகும் பொறுப்பு அலுவலராக செயல்பட்டு வருகின்றனர்.
பதவி காலம் முடிந்தும் நீடிக்கும் துணை வேந்தர்:அதாவது, தற்போது துணைவேந்தராக உள்ள பிச்சுமணியின் 3 ஆண்டு பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முடிவு பெற்றது. இருப்பினும் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாததால் பிச்சுமணியே துணை வேந்தராக நீடிக்கிறார். அதேபோல் ஏற்கனவே பதிவாளராக இருந்தவர் ஓய்வுபெற்ற பிறகும் கடந்த ஒரு வருடமாக புதிதாக பதிவாளர் நியமிக்கப்படாததால் மருது குட்டி என்பவர் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் ஒரு ஆண்டாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி அவர் 60 வயது பூர்த்தியடைந்து பணி ஓய்வு பெற்றார். இருப்பினும் தற்போது வரை அவர் பொறுப்பு பதிவாளராகத் தொடர்ந்து வருகிறார். அதேபோல் பல்கலைக்கழக நிதி அலுவலரின் பதவி காலம் கடந்த மார்ச் 9-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மார்ச் 31 வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் அவர் பணியில் நீடித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது துணை பதிவாளரான வள்ளி நாயகியை பொறுப்பு நிதி அலுவலராக நியமித்துள்ளனர், எனவே நிதி அலுவலரும் பொறுப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அதேபோல் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சுருளி பாண்டியின் பணிக்காலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்ற நிலையில், அவரும் தற்போது வரை பொறுப்பு கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியில் நீடிக்கிறார்.