கரோனாவின் தீவிரத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வகை போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சுபதுக்க நிகழ்வுகளுக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
முன்னறிவிப்பில்லாத லாக்டவுனால் பிழைப்புக்காக வெளிமாநிலத்துக்குச் சென்றவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். அவ்வாறு குஜராத் மாநிலம் சூரத்தில் சிக்கிக்கொண்ட நெல்லையைச் சேர்ந்த சுப்புராஜ் (58) என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். அங்கு இட்லி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அவர் உயிரிழந்த தகவலை அவருடன் பணியாற்றிய சக நண்பர்கள் அவரது மனைவி ரெங்கநாயகிக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் ஊரடங்கால் கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் தவித்துள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக தன்னுடைய கணவரின் உடலை மீட்டு வரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கண்ணீருடன் முறையிட்டுள்ளார். அப்பெண்ணின் நிலையைக் கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சூரத் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறியுள்ளார்.