தேசிய கீதத்தை அவமதித்த மேயர் திருநெல்வேலி:நாடு முழுவதும் 74ஆவது குடியரசு தின விழா நேற்று (ஜன.26) கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வ.உ. சிதம்பரனார் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக்கொடியை ஏற்றி மரியாதையை ஏற்றுக்கொண்டார். திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி ஆலயத்தில் யானை காந்திமதி முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
கோயில் யானை காந்திமதி தேசியக்கொடிக்கு தனது துதிக்கையை தூக்கி மரியாதை செலுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மேயர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய கீதத்தை இசை வடிவில் இசைத்தனர். தேசிய கீதம் முடியும் முன்னரே தங்கள் நாற்காலிகளுக்குச் சென்று மேயர், ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்து உள்ளது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வழக்கமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிக்கும் வரை குடியரசுத்தலைவர் முதல் அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்திய குடிமைப்பணி படித்து பதவியில் உள்ள ஒரு நபர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஆகியோர் தேசியக்கொடியை அவமரியாதை செய்யும் விதமாக அமர்ந்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க:Pariksha Pe Charcha: பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்த மதுரை மாணவி அஸ்வினி!