தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசு தளர்வு அளித்தால் போதும்... நாங்கள் பாதுகாப்பாக சிகை திருத்துவோம்'

பல ஆண்டுகளுக்கு முன்பு, வாடிக்கையாளர்களைத் தேடிச் சென்று சிகை திருத்திய நிலைக்கு, மீண்டும் வந்திருக்கும் சிகை திருத்தும் கலைஞர்களுக்கு, தற்போது நேர விரயம் ஏற்படுகிறதே தவிர, பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றம் இல்லை.

’அரசு தளர்வு அறிவித்தால் போதும், நாங்கள் பாதுகாப்பாகச் சிகை திருத்துவோம்’
’அரசு தளர்வு அறிவித்தால் போதும், நாங்கள் பாதுகாப்பாகச் சிகை திருத்துவோம்’

By

Published : May 8, 2020, 10:18 AM IST

ஆண்களின் தோற்றத்தில் அதிகபட்ச மாறுதல்களைக் காட்டும், மாயவித்தை அவர்களின் சிகைக்கும், தாடிக்கும்தான் உண்டு. அதை அவர்களின் மாதாந்திர செயல்பாடு கணக்கில் ஒன்றாகக் கூட சேர்க்கலாம். கடந்த மாத முக பாவனைகளை, இந்த மாதம் காண வேண்டும் எனில் சிகை அலங்கார கலைஞரின் கைவேலையால்தான் அது சாத்தியப்படும்.

சிகை திருத்தும் கடை

இளைஞர்களுக்கு, சலூன் கடை அண்ணன்கள் மீது எப்போதும் தனி பிரியம் இருக்கும். முன்னணி கதாநாயகர்கள் திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில், ’அந்த படத்துல வர்ற ஹீரோ மாதிரி ஒரு கட்டிங் போடுங்க’ என்று கேட்டு, சலூன் கடைக்காரர்களை திக்குமுக்காடவிடுவது வாடிக்கை. இந்நிலையில், கரோனா நெருக்கடியால் பிறப்பித்த ஊரடங்கு, இளைஞர்களின் கெஞ்சல்கள், சிகை திருத்த மறுக்கும் குழந்தைகளின் அடம், தாத்தாக்களின் நரை, அப்பாக்களின் தாடி என அனைத்தையும் வளரவிட்டிருக்கிறது. அதே ஊரடங்கு, சிகைத் திருத்தும் கலைஞர்களை, எவ்வித தளர்வுகளுமின்றி தவிக்கவிட்டிருக்கிறது.

வீட்டில் சிகைத் திருத்தும் தொழிலாளி

இது குறித்து சிகை அலங்காரக் கலைஞர் சுரேஷ், “சலூன் கடை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், எங்களின் குடும்பம், பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. ஊரடங்கால் கடைகளை மூடினாலும், கடைக்கு வாடகை செலுத்த வேண்டியிருக்கிறது. அரசு எங்களின் சூழ்நிலை புரிந்து கொண்டு, தளர்வில் பரிசீலனை செய்தால், அதற்கேற்றவாறு நாங்களும் பொறுப்புடன் நடந்துகொள்வோம்” என்றார்.

சிகை அலங்காரக் கலைஞர்களின் கருவிகள்

வெளிநாடுகளில், சிகை திருத்தும் கடைகளிலிருந்து கரோனா பரவியதாக வெளிவந்த செய்திகள், தமிழ்நாடு அரசை தளர்வுகளில் கடுமைகாட்ட வைத்திருக்கலாம். ஆனால், விதிகளுடன் அனுமதியளித்தால், நாங்கள் பயன்பெறுவோம் என்கிறார், சிகை அலங்காரக் கலைஞர் சுபாஷ். அவர் கூறுகையில், “பொதுவாக, ஒரு நபருக்கு பயன்படுத்தும் பிளேடை, அடுத்த வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது கிடையாது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும், உபகரணங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துதான் பயன்படுத்துகிறோம். நாங்கள் கைகளில் உறை அணிந்தும், முகத்தில் கவசம் அணிந்தும்தான் தொழிலில் ஈடுபடுவோம். கட்டுப்பாடுகளுடன் கடையைத் திறக்க அரசு உத்தரவிட்டால், உதவியாக இருக்கும்” என்றார்.

அரசு தளர்வு அறிவித்தால், பணிக்கு திரும்புவோம்: சிகை திருத்தும் கலைஞர்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கால், அரசிற்கு ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை மூடியுள்ள சிகை அலங்காரக் கலைஞர்கள், தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். சமீபத்தில் அரசு அறிவித்த தளர்வுகளிலும் அவர்களின் நம்பிக்கைக் கீற்று துளிர்க்காமல் போனது ஏமாற்றத்தின் உச்சம். பல ஆண்டுகளுக்கு முன்பு, வாடிக்கையாளர்களைத் தேடிச் சென்று சிகையைத் திருத்திய நிலைக்கு, மீண்டும் வந்திருக்கும் கலைஞர்களுக்கு, நேர விரயமே ஏற்படுகிறது. பொருளாதார முன்னேற்றம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அரசு சிறப்பு கவனமெடுத்து இவர்களுக்கு உதவ வேண்டும்.

இதையும் படிங்க: பழைய பொருட்களில் ப்ளூடூத் ஹெட்செட் வடிவமைத்து அசத்திய மாணவன்!

ABOUT THE AUTHOR

...view details