திருநெல்வேலி:ரெட்டியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ரெட்டியார்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஹரிராம் என்ற ஆசிரியர் இப்பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளியின் நிலை குறித்து ஆய்வு மேற்கண்டபோது பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளி கட்டடங்களை சுற்றி மரக்கிளைகள் சாய்ந்து கட்டடங்கள் ஆபத்தான நிலையில் காட்சியளிப்பது கண்டு தலைமையாசிரியர் ஹரிராம் வேதனை அடைந்துள்ளார்.
குறிப்பாக அவர் பொறுப்பேற்ற போது பள்ளியில் குடிநீர் கழிப்பிடம் மாணவர்களுக்கு இருக்கைகள் போன்ற எந்த வித அடிப்படை வசதியும் சரிவர இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்த தலைமை ஆசிரியர் ஹரிராம் உடனடியாக குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளார். அரசிடம் நிதி கேட்டால் கிடைப்பதில் தாமதமாகும் என்பதை அறிந்த அவர் தனது சொந்த செலவிலையே பள்ளியை சீரமைக்க முடிவு செய்து உடனடியாக களத்திலும் இறங்கினார். அதன்படி தற்போது மாணவர்களுக்கு மேசைகள் உள்ளிட்டவற்றை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார்.
அதேபோல் பள்ளியில் பல மாதங்களாக பழுதாகி கிடந்த சோலார் கருவியை சீரமைத்துள்ளார். மேலும் பள்ளி கட்டடத்திற்கு மேலே மரக்கிளைகள் சாய்ந்து கிடப்பதால் குப்பைகள் தேங்கி மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் கட்டடங்களிலே தேங்கிக் கிடந்துள்ளது. இதனால் கட்டடம் வலுவிழக்கும் அபாயம் இருந்ததால் அதையும் தனது சொந்த செலவில் சரி செய்து தற்போது கட்டடத்தின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.