உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அதன்படி சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தற்போது பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பிளாஸ்மா தெரபி சிகிச்சை: கரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்த நபரின் ரத்த அணுக்களில் வைரசை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கும். நோயிலிருந்து மீண்ட நபரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, அதிலிருந்து இந்த ரத்த அணுக்கள் சேகரிக்கப்படும். சேகரிக்கப்பட்ட ரத்த அணுக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்துவதன் மூலம் உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்கும்.