நெல்லை:தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச்சேர்ந்தவர் முத்தம்மாள். 72 வயதான இவருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. கண் குறைபாட்டை சரிசெய்ய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி மூதாட்டியின் உறவினர்கள் அவரிடம் இருந்து சுமார் ரூ.60,000 பணத்தை பெற்றுக்கொண்டு நெல்லையில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் மருத்துவமனை அருகே உள்ள சாலையில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். கண் தெரியாத நிலையில் ஆதரவில்லாமல் மூதாட்டி முத்தம்மாள், என்ன செய்வதறியாமல் கூச்சலிட்டுள்ளார்.
இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணுவை தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளனர். இதையடுத்து ஆட்சியர், மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு நடந்தது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது மூதாட்டி தான் உறவினர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் இழந்ததைக்கூறி வேதனை அடைந்துள்ளார்.
உடனே காப்பக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் மூதாட்டியை அழைத்துச் சென்றனர். அப்போது மூதாட்டியின் இரு கைகளையும் தழுவிக்கொண்ட ஆணையர், 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். கூட இருந்து உங்களை கவனித்துக்கொள்கிறோம். உங்கள் பணத்தை மீட்டுத் தரவும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கிறோம்' என்று மனதார ஆறுதல் கூறினார்.