தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிபதியின் கண்முன்னே போலி மதபோதகரை அரிவாளால் வெட்ட பாய்ந்த நபர் - காவல்துறை தீவிர விசாரணை! - fraud preacher

திருநெல்வேலியில் தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்ததாக, போலி மதபோதகரை நீதிபதி முன் அரிவாளால் வெட்டப் பாய்ந்த சகோதரரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நீதிபதியின் கண்முன்னே மதபோதகரை அரிவாளால் வெட்ட பாய்ந்த சகோதரர் - காவல்துறை தீவிர விசாரணை!
நீதிபதியின் கண்முன்னே மதபோதகரை அரிவாளால் வெட்ட பாய்ந்த சகோதரர் - காவல்துறை தீவிர விசாரணை!

By

Published : Jul 19, 2022, 10:43 PM IST

திருநெல்வேலி:பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், இன்று கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோஸ்வா என்பவரை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக காவலர்கள் அழைத்து வந்தனர். அங்கு நீதிமன்ற அறைக்குள் நீதிபதி முன் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கையில் அரிவாளுடன் ஜோஸ்வாவை நோக்கி வெட்டப் பாய்ந்துள்ளார்.

மற்றொரு வழக்கில் கைதியை அழைத்து வந்த காவலர் வேணுகோபால், துரிதமாக செயல்பட்டு அரிவாளுடன் வந்த நபரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அரிவாளுடன் வந்த நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய காவலர் வேணுகோபால்

யார் அந்த நபர்? இதனைத்தொடர்ந்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலி மதபோதகரான ஜோஸ்வா, ஊர் ஊராகச் சென்று மதப் பிரசாரம் என்ற பெயரில் இளம் பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

அந்த வகையில் நவநீதகிருஷ்ணனின் தங்கை மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் இருவரையும் ஜோஸ்வா ஒரே நேரத்தில் காதலித்ததுடன், இருவரையும் பல்வேறு இடங்களுக்கு வெளியே அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜோஸ்வா, நவநீதகிருஷ்ணனின் தங்கையை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

இதனால் மனமுடைந்த நவநீதகிருஷ்ணனின் தங்கை, கடந்த 2017ஆம் ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன், தனது தங்கை மரணத்திற்குக் காரணமான போலி மதபோதகர் ஜோஸ்வா மற்றும் அவருடன் பழகி வந்த மற்றொரு பெண் இருவரையும் தேடி வந்துள்ளார்.

தாய் கொலை: ஜோஸ்வா தலைமறைவானதால் மற்றொரு பெண்ணைக் கொலை செய்ய அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அந்த பெண்ணின் தாய் மட்டுமே இருந்ததால், அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிறகும், தனது தங்கை வாழ்க்கையைச் சீரழித்த ஜோஸ்வாவைக் கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இந்நிலையில்தான் பாலியல் வன்புணர்வு வழக்கு ஒன்றில் போலி மதபோதகர் ஜோஸ்வா, இன்று நெல்லை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதை அறிந்த நவநீதகிருஷ்ணன், நீதிமன்றத்திற்குள் வைத்தே ஜோஸ்வாவை வெட்டிக் கொலை செய்யும் எண்ணத்துடன் கையில் அரிவாளுடன் நீதிமன்ற அறைக்குள்ளேயே சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து பாளையங்கோட்டை காவல்துறையினர் நவநீதகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிபதியின் கண்முன்னே, நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தோண்ட தோண்ட சுவர் முழுவதும் மனித எலும்புக்கூடுகள்.. ஆட்டோ சங்கர் சீரியல் கில்லராக உருமாறியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details