திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள மூலக்காடு ஊரைச் சார்ந்த சகாய தாமஸ் ரூபன் - வின்சி தம்பதி குவைத் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவர்களது மூத்த மகன் சகாய ஜெபாஸ் பிரஜோப், குவைத் நாட்டில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் எனும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், சகாய ஜெபாஸ் பிரஜோப் உள்ளிட்ட 55 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமெரிக்கா நாட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்குக் கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் ஆர்லாண்டோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
இந்த சூழலில், நவம்பர் 23ஆம் தேதி காலை பிரஜோப் மற்ற குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு பிரஜோப்பை சோதித்த மருத்துவர்கள் பத்து முதல் பதினான்கு நிமிடங்கள் தண்ணீருக்கு அடியிலிருந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பிரஜோப்பின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை பெரும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசும் மாணவரின் உடல்நிலை பற்றி அவ்வப்போது விசாரித்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.