நெல்லை:சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் மார்க்ரெட் தெரெசாவை(29) முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த ஆறுமுகம்(40) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 22ஆம் தேதி இரவு சுத்தமல்லியை அடுத்த பழவூரில் உதவி ஆய்வாளர் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
முன்விரோதத்தால் கொலை முயற்சி:இதில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசா நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் தான் வீடு திரும்பினார். ஆறுமுகம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் அவருக்கு உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசா ரூ.10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும் அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக உதவி ஆய்வாளரை ஆறுமுகம் கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் டிஜிபி சைலேந்திரபாபு உள்பட காவல் உயரதிகாரிகள் சிகிச்சையில் இருந்த உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசாவிடம் நேரில் நலம் விசாரித்தனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது:இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறுமுகத்தை தற்போது சுத்தமல்லி காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆறுமுகம் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சுத்தமல்லி காவல் ஆய்வாளர் ஜீன்குமாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு உத்தரவின் பேரில் இன்று(மே 5) ஆறுமுகம் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Go back Chidambaram: கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?