திருநெல்வேலி:தென்தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் முக்கிய கலையாக இருந்து வருகிறது. குறிப்பாக மதுரைக்கு தெற்கே, கோயில் திருவிழாக்களில் வில்லிசைப் பாட்டு தலைசிறந்த பக்தி நிகழ்ச்சியாக இருக்கிறது. கடவுளைப் போற்றிப் பாடும் இந்த வில்லிசைப்பாட்டிற்கு மயங்காத சாமிகளே இல்லை என்று கூறலாம்.
ஆடாத சாமிகளையும் கூட ஆடவைக்கும் வில்லிசை கலைக்கு, கிராமங்களில் அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. கோயில் கொடைகளில் பக்தி பரவசத்துடன் சாமி ஆடும் நபர்கள் மிக உரிமையோடும், குழந்தைத்தனத்தோடும் வில்லுப்பாட்டை ரசித்தபடி ஆடுவார்கள். ஆனால், காலப்போக்கில் கோயில் திருவிழாக்களில் பாட்டு கச்சேரி, செண்டை மேளம் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் போன்ற இசை நிகழ்ச்சிகளின் வரவால் கிராமியக் கலையான வில்லுப்பாட்டுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
எனவே, சமீப காலமாக புதிதாக வில்லுப்பாட்டு கலையை கற்றுக்கொள்ள யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வில்லிசை என்னும் அற்புத கலை அழியும் விளிம்பில் இருக்கும் நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது 14 வயதில் வில்லுப்பாட்டு மீது ஏற்பட்ட அதீத காதல் காரணமாக அதை முறையாக கற்று, தற்போது முழு நேர வில்லுப்பாட்டு கலைஞராக உருவெடுத்து, அப்பகுதி மக்களுக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஆம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அச்சங்குன்றத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் - மாலதி தம்பதியின் மகள், மாதவி. மாதவியின் தந்தை கொத்தனார் வேலை செய்து வருகிறார். மாதவி சிறு வயதில் ரெட்டியார்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு கோயில் திருவிழாவுக்குச் செல்லும்போது, அங்கு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைக் கண்டு உணர்வுப்பூர்வமாக அதை ரசித்துள்ளார். பெரும்பாலும் வயதானவர்களே வில்லுப்பாட்டு கலையை அதிகம் ரசிப்பார்கள்.
ஆனால், மிகச்சிறிய வயதில் மாதவி, வில்லுப்பாட்டு கலையின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு தனது ஆழ்மனதில் பதிய வைத்துள்ளார். மாதவி 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவரது உறவினர் ஒருவர், நமது வீட்டில் யாராவது வில்லுப்பாட்டு படித்தால் நன்றாக இருக்கும் என ஒரு பேச்சுக்கு கூறியுள்ளார். ஏற்கனவே வில்லுப்பாட்டு மீது தீராத காதல் கொண்ட மாதவி, நாமே வில்லுப்பாட்டு கலையைக் கற்றுக் கொண்டால் என்ன என்று எண்ணி, தனது பெற்றோரிடம் விருப்பத்தைக் கூறியுள்ளார்.
சிறுமி என்பதாலும் பெண் என்பதாலும் முதலில் மாதவியின் ஆசைக்கு தடை போட்ட அவரது தந்தை, பின்னாளில் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். அதன்படி வில்லுப்பாட்டு கலையில் சிறந்து விளங்கும் மூத்த வில்லிசை கலைஞர்களிடம் முறைப்படி, வில்லுப்பாட்டு கற்க, தனது மகளை அனுப்பி வைத்தார்.
முதல் அரங்கேற்றம்: ஒருபுறம் கோயில் திருவிழாக்களுக்கு தவறாமல் சென்று, அங்கு நடைபெறும் வில்லிசைக் கச்சேரியின்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டு இரவு பகல் பாராமல் மாதவி வில்லிசையை முழு நேரமாக கற்கத் தொடங்கினார். மூத்த பக்க வாத்திய கலைஞர்களிடம் வில்லுப்பாட்டு குறித்த புத்தகங்களையும் வாங்கி ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினார்.
இதன் காரணமாக ஒரு சில மாதங்களில் கோயில் திருவிழாக்களில் தனியாகச் சென்று நிகழ்ச்சி நடத்தும் அளவுக்கு குழந்தைப் பருவத்திலேயே வில்லிசை கலைஞராக மாதவி உருவெடுத்தார். மாதவியின் முதல் அரங்கேற்றம் அவரது சொந்த ஊரான அச்சங்குன்றத்தில் உள்ள அம்மன் கோயிலில் அரங்கேறியது.
முதல் அரங்கேற்றம் செய்தபோது மாதவிக்கு 14 வயதுதான் ஆகியிருந்தது. தனது முதல் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பக்கத்து ஊர்களில் மாதவியை வில்லிசைப் பாட ஊர் மக்கள் அழைத்தனர். தொடர்ந்து உள்ளூர் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில், தற்போது வரை 4 ஆண்டுகளில் மாதவி 300-க்கும் மேற்பட்ட வில்லிசை கச்சேரியை நடத்தி, இளம் வயதில் பெரும் சாதனைப் படைத்துள்ளார்.