நெல்லை:தமிழ்நாட்டில் பாரம்பரிய முறையில் நாட்டுப் படகு மூலம் நெல்லை மாவட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மீன்பிடி தங்கு தளமோ, மீன்பிடித் துறைமுகமோ இல்லாத காரணத்தினால் சுற்றுவட்டரத்தை சேர்ந்த 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடற்கரை ஒட்டி இரண்டு கடல் மைல் தொலைவு வரை வந்து மீன்பிடித்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நாட்டுப் படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்களும், படகுகள் சேதம் அடைந்து வருகின்றன.
இதனால் கடலுக்குள் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவதும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு பதிவு செய்து வருவதும் அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது. இடிந்தரை கடற்பகுதியில் இருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது குமரி மாவட்ட மீனவர்களின் விசைப்படகு நாட்டுப் படகு மீது மோதியதில் படகில் இருந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.
அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மற்ற நாட்டுப் படகு மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர் .இதில் வினோத் மற்றும் அண்டன் ஆகிய இரு மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து இடிந்தகரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் சுமார் 3,000 மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.