தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் காதலை கைவிட மறுத்த இளம்பெண் ஆணவக் கொலை.. தம்பி செய்த வெறிச்செயல்! - teenager was arrested in Nellai

Tirunelveli woman killed: நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியில், மாற்று சமூகத்து இளைஞருடனான காதலை கைவிட மறுத்த தனது சகோதரியை கொலை செய்த சகோதரனை தாழையூத்து போலீசார் கைது செய்து செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 5:42 PM IST

நெல்லையில் காதலை கைவிட மறுத்த இளம்பெண் ஆணவக் கொலை; சகோதரன் வெறிச்செயல்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் பகுதியில் காதல் விவகாரத்தில் இளம்பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் உடன்பிறந்த சகோதரன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர் பாண்டியன். கூலித் தொழிலாளியான ஆசீர் பாண்டியனுக்கு தங்கத்தாய்(20) உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில், அதே நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை தங்கத்தாய் காதலித்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, தங்கத்தாயின் காதலுக்கு அவரது வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமை காலை முதலே தங்கத்தாய் வீட்டில் தகராறு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை காதலிப்பதை அறிந்த குடும்பத்தார் அனைவரும் காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளனர்.

இதனைக் கேட்காததால் ஆத்திரமடைந்த தங்கத்தாயின் உடன் பிறந்த சகோதரரான 17 வயது இளம் சிறார், நேற்றிரவு (டிச.5) வீட்டு வாசலில் தங்கத்தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து தங்கத்தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்க்கையில் தங்கத்தாய் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

உடனடியாக, தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த தாழையூத்து போலீசார் தங்கத்தாய் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சகோதரியை கொலை செய்த சிறாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இது குறித்த போலீஸ் விசாரணையில், மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரை தனது சகோதரி காதலிப்பது தங்கள் குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. அவரிடம் எடுத்துக் கூறியும் அவர் கேட்காததால் ஆத்திரமடைந்து அவரை வெட்டி ஆணவக் கொலை செய்ததாக கைதான சகோதரர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் சாதிக்காக உடன் பிறந்த சகோதரியையே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் பாதிப்பு.. பள்ளிக்கரணையில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்!

ABOUT THE AUTHOR

...view details