நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டதால் நாடறிந்தவரானார்.
பிறந்தது 1945ம் வருடம் ஜனவரி 17ம் நாள். தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை, தாய் முத்து லக்குமி. கண்ணனுடன் உடன் பிறந்தவர்கள் எட்டுப்பேர். பாரம்பரிய விவசாயக் குடும்பம். அதனால் காங்கிரஸ் சார்பு. தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட கண்ணன் பாரதி கவிதைகள், கம்பராமாயணம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் காலமானார் இவரது மேடைப் பேச்சைப் போலவே இவரது கோபமும் நெருங்கிய வட்டாரத்தில் புகழ் பெற்றது. 70-களில் தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரே காங்கிரஸ் பேச்சாளர் இவர்தான். குறிப்பாக நெல்லை தமிழின் செல்லப்பிள்ளை என்று கூறலாம்.
அரசியல் மேடைகளில் ஆன்மீகமும், ஆன்மீக மேடைகளில் அரசியலும் இவருக்கு கைவந்த கலை. இப்போது ‘சோலிய முடி’ பேச்சைப்போல பேசி விவாதப் பொருளாவதும் புதிதல்ல. பாரதி மகாவி அல்ல என்றது, இன்னும் ஜெயகாந்தன், ரஜினிகாந்த் மனைவி என்று பலரைப் பற்றி மேடையில் விமர்சித்து சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர். கேரளாவின் ஆண்டனி, இன்றைய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் இவரது நண்பர்கள். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போதெல்லாம் இவரைத் தான் நெல்லையில் நிற்க வைப்பார்கள். வலுவான கூட்டணி அமையும்போது கண்ணனை ‘கை’ விட்டு விடுவார்கள். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி இருவராலும் மதிக்கப்பட்ட ஒரே காங்கிரஸ் தலைவர் இவர்தான்.
தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது ராகுல் காந்தி இவர் வீட்டில் வந்து மதிய உணவு சாப்பிட்டதுண்டு. சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் அவர் பாளையங்கோட்டையில் பேசுவதாக இருந்தது. அவர் வரும் வரை பேசுங்கள் என்று கண்ணனை மேடை ஏற்றி விட்டார்கள். சிவாஜி வருவதற்கு 5 மணி நேரம் தாமதமானது. அதுவரை கண்ணன் பேசிக்கொண்டே இருந்தார். கூட்டத்தைக் கட்டிப்போடுவதில் கண்ணன் சமர்த்தர்.
2001-ல் ராஜ்யசபை எம்.பி பதவிக்கு இவர் பெயரும் ஜெயந்தி நடராஜன் பெயரும் டெல்லிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. டெல்லி ஜெயந்தியை தேர்வு செய்ய கண்ணன் கோபித்துக்கொண்டு அ.தி.மு.க-வுக்கு போய்விட்டார். ஆனால்,ஒரு வருடம் கூட அங்கே தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் காங்கிரசுக்கே வந்துவிட்டார். இவர் அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வது’ நான் கருணாநிதியை எதிர்த்து நின்னவண்டா’ என்பதுதான்.
இதையும் படிங்க:தொடர்ச்சியாக 9 மணி நேரம் கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன்.. எழுத்தாளர் நாறும்புநாதன் சிறப்பு பேட்டி