நெல்லை: தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழின் செழுமைகளை உலகறியச் செய்யும் வகையில் நெல்லையில் பொருநை திருவிழா இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒளி ஒலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் ப.வா.செல்லத்துரை பேசுகையில், இலக்கிய விழா அரசு விழாவாக நடத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு விழாக்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. அந்த இடைவெளி இந்த பொருநை இலக்கிய திருவிழா மூலம் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 5 நதிகளை அடிப்படையாக வைத்து இலக்கியத்திருவிழா தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நடத்தப்படுகிறது.
இலக்கிய விழா அரசு விழாவாக மாறியுள்ளது என்றார். தொடர்ந்து சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் பேசுகையில், இந்த அரசுக்கு நன்றி கூறுகிறேன். இந்த அரசு பதவியேற்ற நாள் முதல் இலக்கிய விழா பெருநாயகன் கி.ராஜநாராயணன் மறைவிற்கு ஒரு எழுத்தாளனுக்கு அரசு மரியாதையை வழங்கி, இலக்கிய வாதிகளுக்கு கனவு இல்லம் தந்து கவுரவப்படுத்தியுள்ளது என புகழாரம் சூடினா்.