சென்னை:கோவையில் ஆவின் பாலில் கொழுப்புச் சத்து மற்றும் திடச்சத்துக்களை குறைத்து விலையை மட்டும் உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், நெல்லையிலும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல்ச சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "பிப்ரவரி-1 ஆவின் உருவான தினத்தன்று நிர்வாக காரணங்களுக்காக என்ற புதுவிதமான காரணத்தைக் கூறி, கொழுப்பு சத்து அளவை குறைத்து அறிவிக்கப்படாத மறைமுக பால் விலையேற்றத்தை மக்கள் தலையில் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் சுமத்தியது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆவின் நிர்வாகமோ ஒருபடி மேலே போய் ஒன்றியத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு என்ற காரணத்தைக் கூறி பொதுமக்களுக்கான விற்பனை விலையை நேரடியாக உயர்த்தாமல் பால் முகவர்கள் கொள்முதல் செய்கின்ற சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கான விலையை லிட்டருக்கு 40 காசுகளை இன்று (பிப்2) முதல் உயர்த்தியுள்ளது.
இது பொதுமக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 2 ரூபாய் வரை விற்பனை விலை உயர்வை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும். கடந்த ஆண்டு இறுதியில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் நிறைகொழுப்பு பால் வணிகரீதியான பால் என்கிற பொய்யான காரணத்தை கூறி அந்த வகை பாலுக்கான விற்பனை விலை மட்டும் உயர்த்தப்பட்டது.
மேலும் சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கான விற்பனை விலை உயர்த்தப்படாது என அரசும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு ஒன்றியங்கள் வாரியாக, விஞ்ஞான ரீதியாக பால் விற்பனை விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்த தொடங்கியிருப்பதையும், அதனை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.