நெல்லை:நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள ராமையம்பட்டியில் இன்று(மார்ச்.26) பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பட்ஜெட் என்பது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக உள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது, ஆனால் இப்போது பழைய விதிகளை தகர்த்துவிட்டு தகுதி உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், இவ்வாறு அரசு தெரிவித்துள்ளதால் இத்திட்டம் அனைத்து பெண்களுக்கும் சென்றடைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
ராகுல்காந்தி தகுதி நீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது ராகுல் காந்தி அல்ல. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் என்பதற்காக அவர் இஷ்டத்திற்கு பேச முடியாது, சட்டம் என்பது அனைவருக்கும் சமம், நீதிமன்ற தீர்ப்பை பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ராகுல் காந்தி முதிர்ச்சி இல்லாத தலைவராக உள்ளார். பிரதமர் மோடி நான்கு ஆண்டுகளாக ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். நாடாளுமன்றத்திலும் ராகுல்காந்தியின் நடவடிக்கை முதிர்ச்சியற்றதாகவே இருக்கும். வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பாரதப் பிரதமர் ஆவார்" என்றார்.