வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய டி.ராஜேந்தர் திருநெல்வேலி: நெல்லையில் சிலம்பரசன் நற்பணி மன்றம் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி. ராஜேந்தர், திருநெல்வேலியில் டவுன் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “தன்னையும், தன் மகனையும் தூக்கி வளர்த்த தமிழ்நாடு மக்கள், மழை வெள்ளத்தால் துயரப்பட்டதைக் கண்டு மனம் தாங்காமல் திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களைச் சந்திக்க நேரடியாக வந்தேன். எங்களால் செய்ய முடிந்த உதவிகளை மக்களூக்கு செய்ய முன்வந்துள்ளோம். என் பையன் சிலம்பரசன் நடித்தது வானம்; எங்களால் செய்யமுடிந்த அளவிற்கு செய்ய நினைக்கிறோம் தானம்.
தென்மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்குவதில் எந்த வித அரசியலோ, எதிர்பார்ப்போ எனக்கு இல்லை. முன்பெல்லாம் டி.ஆர் ஆக இருந்தேன். ஆனால் இப்போது இறையடியராக மாறிவிட்டேன். வாழ்க்கையில் வரலாம் துயரம், துன்பம், தொல்லை இதற்கெல்லாம் ஆண்டவன் வைத்திருக்கிறான் ஒரு எல்லை. இறைவனை மீறி இந்த உலகத்தில் எதுவுமெ இல்லை.
ரசிகர் மன்றங்கள் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதை விட, ஏழை எளிய குழந்தைகளுக்கு பசித்தால் பால் வாங்கி கொடுக்கும் மக்கள் நல மன்றங்களாக செயல்பட வேண்டும். நான் ஒரு எம்.எல்.ஏவும் கிடையாது. கரை வேட்டியும் கட்டி வரவில்லை. நான் அரசியல் ரீதியாக பேச விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பிடி அரிசி கொடுப்பதை புண்ணியமாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:1,500 பேருக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய நடிகர் விஜய்.. தூத்துக்குடியில் உயிரிழந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!