திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி நாயகம். கூலித்தொழிலாளியான இவர் மனைவி முத்துமாரியுடன் அதே பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை முத்துமாரி ரத்தக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மோப்பநாயைக் கொண்டு சோதனை செய்தபோது அது வெகு தூரம் செல்லாமல் அந்த வீட்டையே சுற்றி வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் மூலம் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் கோமதிநாயகம் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் உடற்கூறாய்வு முடிந்து முத்துமாரி சடலத்தை அடக்கம் செய்யும்வரை பொறுமை காத்த காவல் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக கோமதிநாயகத்திடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் முத்துமாரி கொலைக்கான மர்மம் விலகியது.
இதுதொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துமாரி ஸ்மார்ட் ஃபோன் வேண்டும் எனக் கூறியுள்ளார். மனைவியின் மீதிருந்த பிரியத்தில் அவரும் செல்ஃபோன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் முத்துமாரி இணையதள சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதைப்பார்த்த கோமதி நாயகம் அவரை கண்டித்தும் கேட்காமல், தொடர்ந்து இணையதளத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவர் நடத்தையில் கோமதி நாயகத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஸ்மார்ட் ஃபோனில் முத்துமாரி மூழ்கி இருந்ததைப் பார்த்த ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்யும்போது முத்துமாரியின் சத்தம் வெளியில் கேட்காததால் கதவை சாத்திவிட்டு ஒன்றும் தெரியாததுபோல அவர் வெளியில் சென்றுள்ளார் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.