தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல தொங்கு பாலம் - எ.வ. வேலு - etv bharat

விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல ரூ.37 கோடி மதிப்பில் தொங்கு பாலம் அமைக்கப்படும் எனப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

By

Published : Jul 23, 2021, 6:42 PM IST

திருநெல்வேலி:கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 23) அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களிடம் எ.வ. வேலு கேட்டறிந்தார்.

நகரங்களில் புறவழிச்சாலை

பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஊராட்சி, ஒன்றிய சாலைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் முதன்மையாகப் பேசப்பட்டது. இந்தாண்டு 2000 கிலோ மீட்டர் கிராம சாலைகள் தரம் உயர்த்தப்படும். தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் ஆகிய மூன்று பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் எடுப்புப் பணி நடைபெற்றுவருகிறது.

அதேபோல் மேற்கண்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க முக்கியத்துவம் கொடுத்து பணி நடைபெற்றுவருகிறது. இருவழிச் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும் நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாகவும் மாற்ற திட்ட மதிப்பீடு செய்யப்படும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

பொதுப்பணித் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.147.44 கோடி மதிப்பிலும் தென்காசி மாவட்டத்தில் ரூ.144.49 கோடி மதிப்பிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.104.58 கோடி மதிப்பிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.

தொங்கு பாலம்

கன்னியாகுமரியில் தற்போது படகு மூலமாகத்தான் விவேகானந்தர் பாறைக்குச் செல்ல வேண்டியுள்ளது. விவேகானந்தர் பாறையில் இறங்கி மீண்டும் படகில் ஏறி திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளூர் சிலைக்குச் செல்ல சுமார் 140 மீட்டர் தூரத்தில் தொங்கு பாலம் அமைக்கத் திட்டம் மதிப்பீடு தீட்டப்பட்டு, ரூ.37 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை

டெண்டர் விடும் பணி

இதற்கான டெண்டர் விடும் பணி தொடங்கியுள்ளது. இருப்பினும், கடலில் பாறை இருக்கும் காரணத்தால் ஐஐடி பேராசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று விரைவில் டெண்டர் இறுதிசெய்யப்படும்.

விவேகானந்தர் பாறை

சுற்றுலா மாளிகை

அந்தப் பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு விருந்தினர்களின் நலன்கருதி சுற்றுலா மாளிகை கட்டப்படும். பொதுவாக கிராம பொருளாதாரம் நகர பொருளாதாரம் அனைத்தும் நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்துதான் உள்ளது.

எனவே நெடுஞ்சாலைத் துறைக்கு முன்னுரிமை அளித்து எங்கெங்குப் பிரச்சினைகள் உள்ளதோ அதை அரசின் கவனத்திற்கு கொண்டுவரும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். திருநெல்வேலியில் வட்டச் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வுசெய்ய இருக்கிறேன். நிச்சயம் திருநெல்வேலிக்கு வட்டச் சாலை அமைக்கப்படும்" என்றார்.

அமைச்சர் எ.வ. வேலு

தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் நலன்கருதி தனி நடை பாதை அமைக்கப்படுமா என்று கேள்விக்கு, "ஏற்கெனவே இருக்கிற சாலையை அகலப்படுத்தச் சொல்கிறார்கள். பிறகு எப்படி தனிப் பாதை அமைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details