தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எட்டு தோல்வி எடப்பாடி! ராஜினாமா செய்" - ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! - அதிமுக பொதுச்செயலாளர்

"எட்டு தோல்வி எடப்பாடி உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 5, 2023, 1:30 PM IST

நெல்லை:ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா எதிர்பாரத விதமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் தேதியை அறிவித்த நாள் முதல் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் செயல்பாடு ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதை நோக்கி தீவிரமாக செயல்பட தொடங்கின.

அந்த வகையில், அங்கு போட்டியிட்ட அதிமுக, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கான போட்டி என்பதை விட அந்த கட்சிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்தன.

இந்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜெகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அக்கூட்டணியின் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றிக்காக ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதன் விளைவாக ஈவிகேஎஸ் இளங்கோவன் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 1,10,556 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியை தழுவினார். அந்த வகையில், அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளாரான ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரத்து 575 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம், ஈபிஎஸ் அணி மற்றும் ஓபிஎஸ் அணி என சிதறிப் போனது, அக்கட்சியின் கூட்டணியிலுள்ள பிற கட்சிகள் இரண்டு தரப்பில் யாரை ஆதரிப்பது என்று எழுந்த குழப்பம், கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜக தலைமை இருவரையும் தேர்தல் சமயத்திலும் கூட சமாதானம் செய்ய முயற்சிகள் எடுக்காதது, இத்தனைக் குழப்பங்களுக்கு நடுவே நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவு குறித்து நடந்த வழக்கு விசாரணை, தேர்தலில் 'இரட்டை இலை' சின்னத்தைக் கைப்பற்றப் போவது யார்? என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவி வந்தன.

கட்சியின் தலைமையையும், கட்சி எடுக்கும் முடிவுகளையும் எதிர்நோக்கி இருந்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முதல் அடிப்படை தொண்டர் வரையிலான எல்லோரையும் இத்தகைய குழப்பங்களுக்கு நடுவே மட்டும் பயணிக்க வைத்திருந்தது. ஆகவே, திமுக கூட்டணியின் ஒற்றுமை மட்டுமின்றி, அதிமுக கட்சிக்குள் நிலவி வந்த குழப்பங்களும் அதன் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸை நீக்கி நிறைவேற்றிய தீர்மானம் உள்ளிட்டவைகள் செல்லும் என தீர்ப்பளித்தது ஈபிஎஸ் தரப்பு அணியால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அவ்வப்போது, இது குறித்து இரண்டு அணிகளின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி, ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் ஒட்டிய சுவரொட்டியால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திசையன்விளையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி அதிமுக தொகுதி ஓபிஎஸ் அணியின் நாங்குநேரி தொகுதி அமைப்பாளராக இருப்பவர் டென்சிங் சுவாமிதாஸ்.

இவர் திசையன்விளை, இட்டமொழி சுற்றுவட்டார பகுதிகளில், "எட்டு தோல்வி எடப்பாடி" என்ற தலைப்பில் எடப்பாடி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் 2019 இல் நடந்த சட்டசபை இடைத்தேர்தல், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், 2021 இல் நடந்த மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

8 தோல்விகளை கண்ட எடப்பாடி எனவும் உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும்' என டென்சிங் ஸ்வாமிதாஸ் போஸ்டர் ஒட்டியுள்ளார். இது அப்பகுதி அரசியல் கட்சி பிரமுகர்கள் இடையே பரபரப்பையும் அதிமுகவினரிடம் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:"2024 தேர்தல் ஒரு கொள்கை யுத்தம்" - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details