திருநெல்வேலி:திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் ஆறாவது அணு உலைகள் கட்டுமானப் பணிகள் சுமார் 49 ஆயிரத்து 621 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. 2027ஆம் ஆண்டுக்குள் இதன் கட்டுமானப் பணிகள் முடிந்து, மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணுமின் நிலையத்திற்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அணு உலைகளின் முக்கிய உதிரி பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்து. அங்கிருந்து தரை மார்க்கமாகவும் அதிக அளவுள்ள உதிரி பாகங்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகப் பகுதிகளுக்குள் உள்ள சிறிய துறைமுகத்திற்கு மிதவைக் கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து எடுத்து வரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை நீராவி உற்பத்திக் கலனை கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவுப் பகுதியில் எடுத்து வரும் பொழுது, இழுவைப் படகின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவைப் படகு பாறை இடுக்கில் சிக்கியதினால், இழுவைப் படகில் உள்ள உலோகத்தினாலான கயிறு துண்டிக்கப்பட்டு விட்டது.
அதனைத் தொடர்ந்து, ஹைட்ராலிக் டிரேய்லர் கிரேன்கள் மூலம் நீராவி உற்பத்திக் கலனை ஏற்றப்பட்டு கொண்டு வருவதற்கான பணிகள் நேற்று (செப் 27) காலையிலிருந்து தொடங்கப்பட்டன. இதற்காக காலையிலிருந்து தொடர் சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வந்தது.
இதற்காக இந்திய கடற்படையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும், ஸ்கூபா டைவர்களும் முகாமிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன இழுவைப் படகும் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஸ்டீம் ஜெனரேட்டர்கள் முழுவதும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதினால், காப்பீடு கழக உயர் அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இரு கலன்கள் மீட்பு : தற்காலிகமாக கடற்கரையில் இருந்து சிக்குண்ட பாறை வரை அமைக்கப்பட்டுள்ள சாலையில் 30 டயர்களை கொண்ட 15 டன் திறனைக் கொண்ட அதிநவீன ஹைட்ராலிக் ட்ரெய்லர் மூலம் ஒரு நீராவி உற்பத்திக் கலனை 3 புல்லர் வாகனங்கள் மூலம் தரைப்பகுதிக்கு இழுத்துக் கொண்டு வந்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த மீட்புப் பணி நடைபெற்றது.
மற்றொரு நீராவி உற்பத்திக் கலனை பத்திரமாக மீட்கும் பணியும் தொடர்ந்து நீடித்தது. இறுதியாக, இரவு 7.15 மணிக்கு அடுத்த நீராவி உற்பத்திக் கலனும் கடலில் காற்றின் வேகம் குறைந்ததினால் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு மீட்கப்பட்டது. இரண்டு நீராவி உற்பத்திக் கலன்கள் எந்த வித சேதாரமும் இன்றி மீட்கப்பட்டதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் நீராவி உற்பத்திக் கலனை மீட்க கடந்த 19 நாட்களாக மேற்கொண்ட முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க:சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் சாதனை! தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புது மைல்கல்!