திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், இரண்டு அணு உலைகளின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
அதில் 2 அணு உலைகளுக்கு தேவையான "ஸ்டீம் ஜெனரேட்டர்" எனப்படும் நீராவி உற்பத்தி செய்யும் இயந்திரம் ரஷ்யாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த ஒன்றை மாதத்திற்கு முன் வந்தடைந்தது. இதனையடுத்து நேற்று (செப். 9) தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 600 டன் எடை உள்ள இரண்டு ஸ்டீம் ஜெனரேட்டர்கள் மிதவை கப்பல் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள துறைமுகத்திற்கு இழுத்துவரப்பட்டது.
அப்போது எதிர்பாரத விதமாக பாறை இடுக்கில் சிக்கி மிதவை கப்பலுடன் இணைந்து இருந்த கயிறு அறுந்து விட்டதாக கூறப்படுகிறது. மிதவைக் கப்பல் ஆனது 55 மீட்டர் நீளமும் 18 மீட்டர் அகலமும் கொண்டது. எனவே அகலமான இந்த மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதினால் அதனை மீண்டும் இழுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் கடலின் நீர்மட்டம் குறைந்ததினால் மிதவை கப்பல் ஒருபுறம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஒப்பந்ததாரர்கள், முத்துக்குளி வீரர்கள், மற்றும் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.