திருநெல்வேலி: இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி மற்றும் மகன் இலங்கையில் உள்ளனர். 1990ம் ஆண்டு சகோதரர் குடும்பத்தினருடன் ராமச்சந்திரன் இந்தியாவுக்கு வந்தார். பின்னர் அவர்களுடன் கங்கை கொண்டானில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தார்.
தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்தோடு வசிப்பவர்களுக்கு இலவசமாக வீடு வழங்கி வருகிறது. ஆனால், ராமச்சந்திரனின் மனைவி மற்றும் மகன் இலங்கையில் இருப்பதால் அவருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் முகாமில் வசிப்பவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட்ட நிலையில், ராமச்சந்திரனுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெயின்டர் வேலை செய்யும் ராமச்சந்திரனுக்கு வீடு கொடுக்கப்படாத நிலையில் தனது சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு அடுத்துள்ள ஆளில்லாத வீட்டின் மாடியில் இரவு நேரங்களில் தங்கியது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ராமச்சந்திரன் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, பணி முடிந்து வழக்கம் போல் ராமச்சந்திரன் தூங்குவதற்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் சகோதரரின் வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ராமச்சந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, ராமச்சந்திரனின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டனர்.