தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Arikomban Elephant:'ஆட்கொல்லி அரிக்கொம்பன் வேண்டாம்' கம்பத்தை கதிகலங்க செய்த யானையை நெல்லைவாசிகள் எதிர்ப்பது ஏன்?

நூறு ஆண்டுகளுக்கு மேல் நடுக்காட்டில் வசிக்கும் காணி பழங்குடி மக்களையே கதி கலங்க வைக்கும் விதமாக பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரிக்கொம்பன் யானை திருநெல்வேலி வனப்பகுதியில் விட்டதற்கு காரணம் என்ன? என அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Arikomban Elephant
Arikomban Elephant

By

Published : Jun 6, 2023, 11:12 PM IST

அரிக்கொம்பன் யானை வனப்பகுதியில் இருந்து குடியுருப்புகளுக்குள் வரலாம் என திருநெல்வேலியில் பொதுமக்கள் அச்சம்

Arikomban Elephant: திருநெல்வேலி:தேனி மாவட்டம், கம்பம் பகுதிகளில் நடமாடி வந்த அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு கடந்த 7 நாட்களுக்கு மேலாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் நடமாடி வந்த அரிக்கொம்பன் நேற்று நள்ளிரவு சின்ன ஓவுலாபுரம் பகுதியில் உள்ள வன பெருமாள் கோயில் வனப்பகுதியில் சமதளமான இடத்தில் நின்றது. அதனை பின் தொடர்ந்த கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மயக்க மருந்து கொடுத்து அரிக்கொம்பன் யானையை பிடித்தனர்.

இதனை அடுத்து அரிக்கொம்பன் யானை சாலை மார்க்கமாக கம்பம் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மேலக்கோதையார் வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டுவரப்பட்டது . 10 மணி நேர சாலை மார்க்கமான பயணத்திற்கு பின்பு நேற்று மாலை மணிமுத்தாறு சோதனை சாவடிக்கு அழைத்து வரப்பட்ட அரிசி கொம்பன் யானை மிகுந்த பாதுகாப்புடன் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. மேலும் சுமார் நான்கு மணிநேர பயணத்தை தொடர்ந்து அந்த யானை நள்ளிரவு மாஞ்சோலை அடுத்த கோதையாறு அணையின் மேல் பகுதியில் சுமார் 4 கிமீ தொலைவில் முத்துக்குழி வயல் என்ற வனப்பகுதியில் யானை விடப்பட்டது.

அரிசியை தேடி திண்ணும் அரிக்கொம்பன்:இந்த நிலையில் எங்கோ இருந்து வந்து எங்கோ ஒரு மூலையில் பொதுமக்களை அச்சுறுத்திய இந்த அரிசி கொம்பன் காட்டு யானையை சம்பந்தமில்லாமல் நெல்லை மாவட்ட வனப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டது ஏன் என்று இங்குள்ள மக்கள் மனதில் கேள்விகள் எழுந்தது. குறிப்பாக, அரிக்கொம்பன் யானை 'அரிசி'-யை விரும்பி ரேஷன் கடையை சூறையாடி அங்கிருந்த அரிசியை தின்றதால்தான் அதற்கு 'அரிசி கொம்பன்' என்று பெயரிடப்பட்டது. அரிசிக்காக என்ன வேண்டுமானலும், செய்ய துணியும் அரிசி கொம்பன் யானை இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கம்பம் நகரத்தில் சுற்றித்திரிந்தபோது பால்ராஜ் என்பவரை இந்த யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று அச்சுறுத்தலான யானையை நெல்லை வனப்பகுதியில் விட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், ஆட்கொல்லி யானையாக கருதப்படும் இந்த யானையை தங்கள் பகுதிக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்றும் அப்பகுதி மக்கள் கேள்வியெழுப்பினர். குறிப்பாக, யானையை இங்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (ஜூன் 5) மணிமுத்தாறு அணைப்பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல், பாபநாசம் அணைக்கு மேல் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் காணி பழங்குடி மக்களும் அரிக்கொம்பன் யானையை இங்கு விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், யானை விடப்பட்டதை கண்டித்து நேற்று இரவு பாபநாசம் சோதனை சாவடி முன்பு காணி பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோதையாறு முத்துக்குழி வயல் வனப்பகுதியில் 'அரிக்கொம்பன்': நூற்றாண்டுகளாக காட்டிற்குள் யானை, புலி, சிறுத்தை, கரடி என காட்டு விலங்குகளுடன் ஒன்றி வாழும் பழங்குடி மக்களே கதி கலங்கும் அளவிற்கு அரிக்கொம்பனின் செயல்பாடு அமைந்துள்ளது. இருப்பினும், இவ்வளவு பெரிய அச்சுறுத்தலான யானையை இங்கே விடுவதற்கு வனத்துறை முடிவெடுக்க காரணம் என்று என்ன? என்று ஆராய்ந்தபோது, நமக்கு சில பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது தற்போது, யானை விடப்பட்டுள்ள 'கோதையாறு முத்துக்குழி வயல் வனப்பகுதி' மிகவும் பசுமை நிறைந்த பகுதியாகும். வருவாய் நிர்வாக ரீதியாக கோதையாறு அணைப்பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஆனால், வனரீதியாக அது நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகதிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது முத்துக்குழி வயல் பகுதி புல் நிறைந்து காணப்படுகிறது மேலும் இங்கிருந்து கேரளா மாநில வனப்பகுதிக்கு செல்லும் யானை வழித்தடம் அமைந்துள்ளது. அதேபோல், வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் 'தாமிரபரணி ஆறு' இந்த பகுதியில் தான் உற்பத்தியாகிறது.

அரிக்கொம்பன் உணவுக்காக அலையவேண்டியிருக்காது:எனவே, இங்கு தண்ணீருக்கும் பஞ்சமில்லை; எனவே, கொம்பன் யானை பசுமை நிறைந்த முத்துகுழி வயல் பகுதியில் தனக்கு தேவையான உணவுகளை பூர்த்தி செய்துகொள்ளும் என்பதாலும் அதே சமயம், இங்குள்ள வழித்தடம் வழியாக கேரளா வனப்பகுதிக்கு செல்லவும் அதிக வாய்ப்பு இருக்கும் என்பதாலும், இந்த யானையை இங்கே விடுவதற்கு வனத்துறை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம், நகர் பகுதிக்குள் வந்து பழக்கப்பட்ட இந்த அரிக்கொம்பன் யானை வனப்பகுதியை விட்டு கீழ் இறங்காது என்பதற்கு யார் உத்தரவாதம் கொடுப்பது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, யானை விடப்பட்டுள்ள முத்துக்குழி வயல் பகுதியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் நாலுமுக்கு மாஞ்சோலை போன்ற ஆள்நடமாட்டம் உள்ள பகுதி அமைந்துள்ளது. மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர வசித்து வருகின்றனர்.

எனவே, அரிக்கொம்பன் யானை கோதையாறு அணையில் இருந்து மாஞ்சோலை வழியாக கீழே இறங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். அதேபோல், மாஞ்சோலையில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக காணி பழங்குடி மக்கள் வசிக்கும் சின்ன மைலார், பெரிய மைலார் போன்ற இடங்களுக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தான், அரிசி கொம்பனை இங்கே விடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற, முரட்டு யானைகளை அரசு முகாமில் வைத்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க யானையை மிகமிக ரகசியமாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்றது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு அணை அருகே உள்ள சோதனை சாவடி வரை மட்டுமே யானை செல்லும் காட்சிகளை படம்பிடிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சோதனை சாவடியை யானை கடந்த மறு நொடியே சோதனை சாவடி இழுத்து மூடப்பபட்டது. இருப்பினும், அங்கிருந்து யானை செல்லும் காட்சிகளை படம்பிடிக்க சென்ற செய்தியாளர்கள் சில வனத்துறை ஊழியர்களால் தடுக்கப்பட்டனர்.

இதனால், வனத்துறையினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கமாக, இது போன்று வன விலங்குகளை கொண்டு செல்லும்போது செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி அளிப்பார்கள். ஆனால், இந்த முறை ரகசியமாக யானை கொண்டு செல்லப்படுவதால் சட்டத்திற்கு விரோதமாக யானையை கையாளுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் ஒரு புகார் எழுந்தது. மேலும், யானை கொண்டு செல்வதற்கு முன்பாக வனத்துறையினர் ஒரு ஜீப் முழுவதும் கிலோ கணக்கில் மூட்டை மூட்டையாக காய்கறி கொண்டு சென்றனர். எனவே, வனத்துறையினரின் நாள் கணக்கில் முகாமிட்டு யானையை கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆட்கொல்லி அரிக்கொம்பன்:இது குறித்து சின்ன மைலார் பகுதியில் வசிக்கும் காணி பழங்குடி வகுப்பை சேர்ந்த கிரிஜா நமது ஈடிவிபாரத்திடம் கூறியபோது, 'நாங்கள் காட்டுக்குள் கூரை அமைத்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதியில் விடப்பட்டுள்ள அரிசி கொம்பன் யானைக்கு நகர் எது காடு எது என்பதை எல்லாம் தெரியாது அது அரிசியை தேடி உண்ணும் பழக்கம் கொண்டது. எனவே, எங்களுக்கு அந்த யானையை கண்டு அச்சம் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேல் எங்கள் முன்னோர்கள் இந்த காட்டுக்குள் வசிக்கின்றனர்.

யானை உள்பட பல்வேறு விலங்குகளை ஒன்றிதான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அந்த விலங்குகளால் எங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆனால், தற்போது காட்டுக்குள் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை ஆட்கொல்லி யானையாக உள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அந்த யானையை அப்புறப்படுத்தி, வேறு எங்காவது முகாமிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

உயிரிழப்பு நேர்ந்தால் அரசுதான் பெறுப்பேற்க வேண்டும்:இது குறித்து ஜமீன் சிங்கப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பூதபாண்டி ஈடிவி பாரத்திடம் கூறியபோது, 'கம்பத்தில் பிடிக்கப்பட்ட யானையை சம்பந்தமில்லாமல் இங்கே கொண்டுவந்து விட்டுள்ளனர். இந்த யானை இன்னும் எத்தனை பேரை, இங்கே பழிவாங்க போகிறது? என்று தெரியவில்லை. ஒருவேளை யானை தாக்கி யாராவது உயிரிழந்தால் அதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும்' என்று கூறினார்.

அரிக்கொம்பன் கீழே வர வாய்ப்பு அதிகம்:இவரைத்தொடர்ந்து பேசிய விவசாயி பவித்ரன், 'எங்களுக்கு இந்த யானை வருவது தெரியாது. தெரிந்திருந்தால் அதை உள்ளே விடாமல் தடுத்திருப்போம். இந்த பகுதியில் நாங்கள் அதிக அளவில் அரிசி விவசாயம் செய்து வருகிறோம். இப்படி இருக்கும்போது, அரிசியைத் தேடி உண்ணும் இந்த அரிசி கொம்பன் யானையை இங்கே விடுவதால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். வனத்துறையினர் யானையை கொண்டு செல்லும் இடத்தில் வழிப்பாதையே கிடையாது. எனவே, அந்த யானை அடர்ந்த காட்டுக்குள் விடுவதற்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் அந்த யானை கீழே இறங்கி வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

கோதையாரில் கூலாக வலம்வரும் அரிக்கொம்பன்:எனவே, அரசு தான் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இதற்கிடையில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரிசி கொம்பன் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், அந்த யானை கோதையார் அணையில் உலாவரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், யானை அணையில் தண்ணீர் அருந்துவது போன்று காட்சி இடம் பெற்றுள்ளது.

விலங்குகளும் மனிதர்களுக்கு சமமாக மதிப்பளிக்கக்கூடிய உயிரினம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும் கூட, ஒரு விலங்கு ஆட்கொல்லியாக மாறும்போது அதனால், மனிதர்கள் பாதுகாப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. எனவே, திருநெல்வேலி மாவட்ட மக்களின் அச்சத்தை போக்க தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:“அரிக்கொம்பனை பிடித்த அரிசி ராஜா” ஒரு ரவுடி போலீஸ் ஆன கதை!

ABOUT THE AUTHOR

...view details