திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டதொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அக்கட்சியில் மாநில துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் நயினார் பாலாஜிக்கு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாஜக கட்சியில் இளைஞரணி மாநில துணைத் தலைவர் பொறுப்பை பெற்றுத்தந்தார். இந்த நிலையில், பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள 13 ஏக்கர் இடத்தினை இளையராஜா என்பவரிடமிருந்து கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார்.
மோசடியான பத்திரப்பதிவு: இதற்கான பத்திரப்பதிவு, ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போதைய ராதாபுரம் சார்பதிவாளர் சரவண மாரியப்பன் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த கிரைய ஒப்பந்த பத்திரப்பதிவு செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக சென்னையைச் சேர்ந்த 'அறப்போர் இயக்கம்' (Arappor Iyakkam) சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றம்சாட்டியது. இதற்கிடையில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்திக்கும்போது நயினார் பாலாஜி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
புகாரளித்த 'அறப்போர் இயக்கம்':இந்த நிலையில் நெல்லை மண்டல பத்திரப்பதிவு துறை டிஐஜி மோசடி ஆவணங்கள் மூலம் நயினார் பாலாஜி கிரைய ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரூ.100 கோடி மதிப்பிலான அந்தப் பதிவை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் பல்வேறு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது நயினார் பாலாஜி வாங்கிய அந்த இடம் ஏற்கனவே பல சர்ச்சைக்குள்ளான இடமாக இருக்கிறது. பலர் இந்த இடத்துக்கு உரிமை கோரினர். 2006-ல் சரஸ்வதி என்பவரின் பெயரில் அந்த இடத்துக்கான பட்டா இருந்துள்ளது. அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்பவருக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வில்லங்கமான சொத்துக்கு பத்திரப்பதிவு:பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர், 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகப்பிரிவினை பத்திரத்தைப் பதிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். தற்போது வரை இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
இதுபோன்ற சூழலில் தான், இந்த 1.3 ஏக்கர் நிலத்தை சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இளையராஜா என்பவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை கடந்த 2022ஆம் வருடம் ஜூலை 23ஆம் பதிவு செய்துள்ளனர்.
யார் இந்த இளையராஜா?:மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பிரபல நில விற்பனை ஏஜெண்டாக இருந்து வருகிறார். மதுரை மட்டுமில்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இவர் பல்வேறு முக்கிய பிரபலங்களுக்கு நிலங்களை வாங்கி கொடுக்கும் வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு (Madurai Meenakshi Amman temple Lands) சொந்தமான இடத்தை இளையராஜா மோசடியாக விற்றுக் கொடுத்ததாக ஒரு புகார் உள்ளது. இதுபோன்ற நிலையில் தான், விருகம்பாக்கம் இடத்தை பார்த்த நயினார் பாலாஜி அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். எனவே, அவர் இளையராஜாவின் உதவியை நாடியுள்ளார். அதன் பெயரில் தான் இளையராஜா விருகம்பாக்கம் இடத்தை நயினார் பாலாஜிக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுக்க உதவியுள்ளார்.
சென்னை நிலத்துக்கு நெல்லையில் பதிவு செய்ய முடியுமா?:பத்திரப்பதிவுத்துறை சட்ட விதிப்படி ஒரு நபர் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சொத்து வாங்க முடியும். ஆனால், பத்திரப் பதிவைப் பொறுத்தவரை சொத்து உள்ள மாவட்டத்தை விட்டு, பிற மாவட்டத்தில் பதிவு செய்யும்போது பதிவு செய்யும் மாவட்டத்தில் அந்த நபருக்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டும். அந்த வகையில், நயினார் பாலாஜி சென்னையில் இடம் வாங்கியிருந்தாலும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது.