திருநெல்வேலி:தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ் மொழி சார்ந்த விடயங்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதைப் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் இந்து ஆலயங்களில் தமிழ் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதேபோல் தமிழ் பஞ்ச புராணமான தேவாரம் திருவாசகம் பாடல்களை பாடும் ஓதுவார் மூர்த்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழில் அர்ச்சனை என்பது ஏற்கனவே 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம் என்பது சிலர் அறியாத உண்மையாகும். அதேசமயம் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே இந்து ஆலயங்களில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்த தமிழ் அறிஞர் கா.சு. பிள்ளை குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி டவுன் புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவில் காந்திமதிநாத பிள்ளை மீனாட்சியம்மை தம்பதிக்கு 1888ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர்தான் தமிழ் கா.சு. பிள்ளை. கா. சுப்பிரமணிய பிள்ளை என்ற இவரது இயற்பெயர் தமிழ் மீது அவருக்கு ஏற்பட்ட பற்று காரணமாக தமிழ் கா.சு. பிள்ளை என்று அழைக்கப்பட்டது.
எம்.எல். பட்டப்படிப்பு முடித்த முதல் தமிழர்
1898ஆம் ஆண்டுவரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்ற இவர், 1908ஆம் ஆண்டு தேர்வுபெற்றார். பின்னர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1910ஆம் ஆண்டு பி.ஏ. (Bachelor of Arts) பட்டப்படிப்பும், 1913ஆம் ஆண்டு எம்.ஏ. தமிழ் பட்டப்படிப்பும் 1914ஆம் ஆண்டு எம்.ஏ. (Masters of Arts in English) ஆங்கிலம், பி.எல். பட்டப்படிப்பும் பயின்று தேர்ச்சிப் பெற்றார்.
தொடர்ந்து 1917ஆம் ஆண்டு முதுநிலை சட்டப் படிப்பில் எம்.எல். (Master of Laws Courses)தேர்ச்சிப் பெற்றார். அந்தக் காலத்தில் எம்.எல். சட்டப்படிப்பு படிப்பது என்பது மிகப்பெரிய விடயமாகப் பார்க்கப்பட்டது.
அப்போது எம்.எல். பட்டப்படிப்பு பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையையும் தமிழ் கா.சு. பிள்ளைக்கு கிடைத்தது. அதனால் எம்.எல். பிள்ளை என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் மொழி மீதும், தமிழ் இலக்கியம் மீதும் தீராத பற்றுக்கொண்டவராக கா.சு. பிள்ளை திகழ்ந்தார். அதேசமயம் ஆங்கிலம், தெலுங்கு எனப் பல மொழிகளைப் பேசும் திறமைகொண்டவராகவும் இருந்தார்.
1920ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் தாகூர் குடும்பப் பெயரால் தாகூர் சட்ட விரிவுரையாளர் பரிசு என்ற தலைப்பில் சட்டப்படிப்பு தொடர்பான சொற்பொழிவு போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற முதல் தமிழர் கா.சு. பிள்ளை ஆவார்.
ஓதுவார் மூர்த்திகளைக் கண்டு மனமுடைந்த கா.சு. பிள்ளை
ஏதாவது ஒரு தலைப்பில் பன்னிரெண்டு சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டும் என்பது போட்டியின் விதி. கா.சு. பிள்ளை இந்த 12 சொற்பொழிவுகளையும் சிறப்பாக ஆற்றி தாகூர் சட்ட விரிவுரையாளர் என்ற விருதையும், 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையையும் பெற்றார்.
இதுபோன்று சட்டப்புலமைவாய்ந்த தமிழ் கா.சு. பிள்ளை சர்பிடி. தியாகராஜ செட்டியார் உதவியால் 1919 முதல் 1927ஆம் ஆண்டு வரை சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் 1929 முதல் 1930ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் (Annamalai University) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் பணியைத் துறந்துவிட்டு திருநெல்வேலி திரும்பிய கா.சு. பிள்ளை அப்போதைய திருநெல்வேலி நகராட்சி உறுப்பினராக ஐந்து ஆண்டு காலம் பணியாற்றினார். அப்போது, தென் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் தர்மகர்த்தாவாகவும் பதவி வகித்தார்.
அப்போதுதான் கோயிலில் பஞ்ச புராணங்களைப் பாடும் ஓதுவார் மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததைக் கண்டு மனமுடைந்தார். அதாவது கோயிலில் அர்ச்சகர்கள் வடமொழியான சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்துவிட்டு முக்கியப் பிரமுகர்கள், பக்தர்களுக்கு விபூதி, பிரசாதம் வழங்கியுள்ளனர்.
பிள்ளையார் சுழிபோட்ட தமிழ் கா.சு. பிள்ளை
அதன்பிறகே ஓதுவார் மூர்த்திகள் தேவாரம் திருவாசகம் பாடிவந்துள்ளனர். அதனால், பக்தர்கள் யாரும் தேவாரப் பாடல்களைக் கவனிக்காமல் விபூதி வாங்குவதிலும் பிரசாதம் வாங்குவதிலும் முண்டியடித்துக் கொண்டிருப்பதை தமிழ் கா.சு. பிள்ளை கவனித்துள்ளார்.
வட மொழியில் அர்ச்சனை செய்வதால் தமிழ் வழிபாடு குறித்து பக்தர்களுக்குப் புரிதல் ஏற்படாது என்பது ஒருபுறம் இருந்தாலும்; தமிழ் பக்தி இலக்கியமான பஞ்ச புராணங்களைக் கவனிப்பதன் மூலமாவது தமிழ் வழிபாடு குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்பதை தமிழ் கா.சு. பிள்ளை நன்கு உணர்ந்தார்.
எனவே உடனடியாக கோயில் தர்மகர்த்தாவாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி இனி வரும் காலங்களில் அர்ச்சகர்கள் வடமொழியில் மந்திரம் சொல்லி முடித்த பிறகு ஓதுவார் மூர்த்திகள் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும், அதன் பிறகே பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கிறார். நாளடைவில் இந்த நடைமுறை அனைத்துக் கோயில்களிலும் தற்போதுவரை பின்பற்றப்பட்டுவருகிறது.
இது ஒரு சின்ன மாற்றமாக இருந்தாலும்கூட அப்போது தமிழ் கா.சு. பிள்ளை ஓதுவார் மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்திருந்தால் நாளடைவில் இந்து ஆலயங்களில் தேவாரம் திருவாசகம் பாடும் நடைமுறையே முற்றிலும் ஒழிந்திருக்கும் என்று எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழ் கா.சு. பிள்ளை அன்று போட்ட பிள்ளையார் சுழிதான் இன்று தமிழ்மொழி அர்ச்சனை பெண் ஓதுவார் மூர்த்திகள் என இந்து ஆலயங்களில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுவருவதாக எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு நூல்களை எழுதிய கா.சு. பிள்ளை
இது குறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் நம்மிடம் கூறுகையில், “கா.சு. பிள்ளை தமிழுக்காகப் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதில் கா.சு. பிள்ளை உறுதியாக இருந்தார்.
தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாகவே அவர் நெல்லையப்பர் கோயிலில் அறங்காவலராக இருந்தபோது ஓதுவார் மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். இது ஒரு சின்ன மாற்றமாக இருந்தாலும்கூட அன்று அவர் அதைச் செய்யாவிட்டால் நாளடைவில் ஓதுவார் மூர்த்திகள் தேவாரம் பாடும் முறை ஒழிந்திருக்கும்” என்றார்.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு சிறப்புவாய்ந்த நூல்களை தமிழ் கா.சு. பிள்ளை எழுதியுள்ளார். குறிப்பாக தமிழ் இலக்கிய வரலாற்று நூலை முதன் முதலில் எழுதியவர் தமிழ் கா.சு. பிள்ளைதான். இன்றளவும் கல்லூரி பாட புத்தகங்களில் இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறுதான் பயிற்றுவிக்கப்பட்டுவருகிறது.
இது தவிர சமய நூல் படைப்புகள், வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், கதைகள், அறிவுச்சுடர் நூல்கள், கலை நூல்கள், பதிப்பு நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள், சட்ட நூல்கள், கட்டுரைகள் எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் 1934ஆம் ஆண்டு சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் என்ற சங்கத்தை திருநெல்வேலியில் அமைத்து அதன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இன்றளவும் அந்தச் சங்கம் ‘மாநில தமிழ் சங்கம்’ என்ற பெயரில் இயங்கிவருகிறது. தமிழ் மொழியில் பெயர் வைப்பதிலும் வல்லவராகவும் கா.சு. பிள்ளை திகழ்ந்துள்ளார்.
குறிப்பாக இவர் சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியபோது திமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் இருவரும் தமிழ் கா.சு. பிள்ளையின் மாணவர்களாக இருந்துள்ளனர்.
இயற்கை எய்திய பிள்ளை
அப்போது ராமையா என்ற இயற்பெயர் கொண்ட அன்பழகனுக்கு தமிழ் கா.சு. பிள்ளைதான் அன்பழகன் எனப் பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது. அன்பாகப் பேசும் குணம் கொண்டவர் என்பதால் அவருக்கு கா.சு. பிள்ளை அன்பழகன் என்று பெயர்வைத்துள்ளார். அதேபோல் நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட நெடுஞ்செழியனுக்கு நெட்டையாக இருந்ததால் நெடுஞ்செழியன் என்று தமிழ் கா.சு. பிள்ளை பெயர்வைத்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் சைவ குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் கா.சு. பிள்ளை அப்போதே சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக நீதிக் கட்சியைப் பின்பற்றி பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, விதவை மறுமணம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த கொள்கைகளையும் கா.சு. பிள்ளை முன்னெடுத்துச் சென்றதாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 1945 ஏப்ரல் 30 அன்று தமிழ் கா.சு. பிள்ளை இயற்கை எய்தினார். இவரது மனைவி பிரபு அம்மாளும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். தமிழ் கா.சு. பிள்ளையின் இரண்டு மகன்கள் மீனாட்சி சுந்தரம், திருநாவுக்கரசு. மகள் மங்கையர்கரசி.
தமிழ் மொழிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தமிழ் கா.சு. பிள்ளைக்கு அரசு சார்பிலும், தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது அவரது குடும்பத்தினரின் வருத்தமாக உள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்திற்குள் தமிழ் கா.சு. பிள்ளை நினைவாக அமைக்கப்பட்டுள்ள நடுகல் மட்டுமே இன்றளவும் அவரது தமிழ் ஆர்வத்தையும், தமிழ்ப் புலமையையும் சுமந்து நிற்கிறது. இது தவிர அவர் தொடர்பான எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பது வேதனைக்குரிய விடயம்தான்.
கடைசி தமிழன்
இது குறித்து தமிழ் கா.சு. பிள்ளையின் மகன் வழிப்பேரன் சுப்பிரமணியன் நம்மிடம் கூறுகையில், “தாத்தா தமிழ் மொழிக்காகப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் எம்.எல். சட்டப்படிப்பு பெற்ற முதல் தமிழர் எங்கள் தாத்தாதான். எப்போதும் எழுதிக்கொண்டும்; படித்துக் கொண்டும் இருப்பார்.
கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் சட்ட விரிவுரையாளர் விருது வாங்கிய முதல் மற்றும் கடைசித் தமிழன் எங்கள் தாத்தாதான். தமிழ் மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக அவர் நெல்லையப்பர் கோயிலின் அறங்காவலராக இருந்தபோது பஞ்ச புராணங்கள் பாடும் ஓதுவார் மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்.
20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனால், அவரது நூல்களை அரசுடமையாக்க 20 ஆண்டு காலம் எனது தாய் போராடிவந்தார். இறுதியாக 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தாத்தா நூல்கள் அரசுடமையாக்கப்பட்டு ஆறு லட்சம் ரூபாய் எங்களுக்கு வழங்கப்பட்டது.
இருப்பினும் தாத்தாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே பாடப்புத்தகங்களில் அவரது பெயரைச் சேர்த்து இன்றைய தலைமுறையினர் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருக்கு மணிமண்டபம் அமைத்துத் தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
கா.சு. பிள்ளை குறித்து பலரும் அறிந்திடாத உன்மைகள் ஓதுவார் மூர்த்திகளுக்கு அங்கீகாரம்
கவிஞர் மு.சு. சங்கர் என்பவர் ஆரம்ப காலத்திலிருந்து தமிழ் கா.சு. பிள்ளை குறித்த வரலாறுகளையும், தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளையும் பொதுவெளியில் முன்னெடுத்துச் செல்கிறார்.
இது குறித்து மு.சு. சங்கர் நம்மிடம் கூறுகையில், “கோயிலில் வடமொழி மந்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவந்ததைக் கண்டு மனமுடைந்த கா.சு. பிள்ளை தமிழ் பஞ்சபுராணம் பாடும் ஓதுவார் மூர்த்திகளுக்கு அங்கீகாரம் கொடுத்தார். அதே போன்று தமிழ் மொழிக்காக ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
அவர் படைத்த தமிழ் இலக்கிய வரலாறு இன்றளவும் பேசப்படுகிறது. எனவே தமிழ் கா.சு. பிள்ளைக்கு அரசு மணிமண்டபம் அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்றார். அன்னைத் தமிழில் அர்ச்சனை, பெண் ஓதுவார் மூர்த்திகள் என இந்து ஆலயங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதை இன்றைய தலைமுறையினர் பார்க்க முடிந்தாலும் இந்த மாற்றத்திற்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே வித்திட்டவர் தமிழ் கா.சு. பிள்ளைதான் என்பது மறக்க முடியாத - மறுக்க முடியாத உண்மையாகும்!
இதையும் படிங்க:தமிழ் வளர்ச்சிக்கு நிரந்தரக் குழு அமைக்கக் கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு