தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிள்ளையாருக்கு உருவாகும் நீச்சல் குளம் - நெல்லை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை! - திருநெல்வேலி பிரம்மாண்ட விநாயகர் சிலைகள்

Vinayakar Vijarsanam: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாமிரபரணி நதி நீர் மாசடைவதை தடுக்கும் வகையில், பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்காக பிரத்யேக குளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பிள்ளையாருக்கு உருவாகும் நீச்சல் குளம்
நெல்லையில் பிள்ளையாருக்கு உருவாகும் நீச்சல் குளம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:33 PM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாமிரபரணி நதி நீர் மாசடைவதை தடுக்கும் வகையில், பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்காக பிரத்யேக குளம் உருவாக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி:இந்தியா முழுவதும் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விநாயகர் சிலைகள், ஒரு வார வழிபாடுகளுக்குப் பிறகு நாளை (செப்.24) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

முன்னதாக, சிலைகளை கரைப்பது தொடர்பாக நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி ரசாயனம் கலந்த சிலைகளைப் பயன்படுத்த, அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக, நெல்லை பாளையங்கோட்டை கிருபா நகரில் வட மாநிலத் தொழிலாளி அமைத்திருந்த விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில், அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலந்த சிலைகள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்தது.

அதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து அந்த விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தை மூடி சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளுடன், கடைசி நேரத்தில் சிலைகள் விற்பனைக்கு போலீசார் அனுமதித்தனர்.

அதனை அடுத்து, அந்த தயாரிப்பு கூடத்தில் இருந்து விற்கப்பட்ட சிலைகள் உள்பட ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், தற்போது சிறப்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு, அடுத்த கட்டமாக அவற்றை நீர் நிலைகளில் கரைக்க மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ரசாயனக் கலவையினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்ற, நெல்லை மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது. அந்த வகையில், மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை கையாண்டுள்ளது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி, வண்ணார்பேட்டை தாமிரபரணி நதிக்கரை அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள குளத்தில், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக நீச்சல் குளம் போன்று தற்காலிக குளம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.

தற்காலிகமாக உருவாக்கப்படும் இந்த குளத்திற்கு அருகே உள்ள கிணறு மற்றும் தாமிரபரணி நதியிலிருந்து நீரைக் கொண்டு வந்து நிரப்பப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பாதுகாப்பு கருதி ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நெல்லை கோட்டாட்சியர் ஷேக் அயூப் தலைமையில் மாநகராட்சி, தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் நாளை இங்கு கரைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல், அதைச் சுற்றி உள்ள ஐந்து மாவட்டம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளது. ஆற்றில் ரசாயனம் கலந்த சிலைகளை கரைத்தால் தண்ணீர் மாசுபடும் என்பதைக் கருதி, விநாயகர் சிலைகளைக் கரைக்க பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சிலைகளை கரைக்கும் விதிமுறைகள் - மாசு கட்டுப்பாடு வாரியம்!

ABOUT THE AUTHOR

...view details