தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலில் நடக்கும் யுத்தம்; கண்ணீரில் மிதக்கும் மீனவர்கள்.. நாட்டு படகுகளுக்கு நல்வழி பிறக்குமா? - சபாநாயகர் அப்பாவு

தமிழினத்தின் மூத்த குடியான பரதவர்கள் எனப்படும் மீனவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், தற்போது விசைப்படகு மீனவர்களால் சொல்ல முடியாத துயரை நாட்டுப்படகு மீனவர்கள் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்குள்ளாக முளைத்துள்ள இந்த புதிய சிக்கல், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வியலைப் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் கடும் விளைவுகள் நாட்டுப்படகு மீனவர்களின் எதிர்காலத்தையே அச்சத்திற்குள்ளாகியுள்ளது. அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

Special news package on conflict between country boat and trawler fishermen
நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு இடையிலான மோதல் குறித்த செய்தி தொகுப்பு

By

Published : Mar 16, 2023, 2:05 PM IST

Updated : Mar 16, 2023, 3:41 PM IST

விசைப்படகு மீனவர்களால் நாட்டுப்படகு மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவதன் காரணம் என்ன

திருநெல்வேலி: இந்தியாவிலேயே 14 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கி 1,076 கி.மீ. நீளமுள்ள நீண்ட கடற்கரையைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. 608 மீனவ கிராமங்கள் உள்ளன. ஆண்டொன்றுக்கு 5.48 லட்சம் டன் மீன் பிடிப்பு நடைபெறுகிறது. இதன் மூலம் ரூ.5,565.46 கோடி வருவாய் கிடைக்கிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிப்புச் செய்கிறது. 5,803 விசைப்படகுகள் வாயிலாகவும், 41,337 நாட்டுப்படகுகள் மூலமும் 10.48 லட்சம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகைத் திணை நிலங்களில் 'வருணன் மேய பெருமணல் உலகம்' என நெய்தல் திணையை தொல் தமிழ் இலக்கியம் தொல்காப்பியம் கூறுகிறது. கடலும் கடல் சார்ந்த இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள், துறைவன், சேர்ப்பன், பரத்தி, பரதவர், பரத்தியர், நுளையர், நுளைச்சி, நுளைச்சியர், அளவர், வலைஞர் எனும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். 'உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்' என்று நற்றிணையும் (63:1), 'துறைவன் தம்ஊ ரானே' என்று குறுந்தொகையும் (97:3), 'திண்டிமில் வன்பரதவர்' என்றும் (புறம். 24) மீனவர்கள் தமிழ் இலக்கியங்களால் அழைக்கப்படுகின்றனர். 'திமிலோன்' என்றும்கூட பண்டை இலக்கியங்கள் பரதவர்களை அழைக்கின்றன.

கடலோடிகளான தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஒரு காலத்தில் செல்வச் செழிப்பு மிக்கதாக இருந்தது. கடந்த நூறாண்டுகளுக்குள் மிகப் பெரிய மாற்றங்கள் மீனவர்களது வாழ்க்கையில் ஏற்படத்தொடங்கின. நிலப்பகுதியில் நிலவிய வறட்சிநிலை காரணமாக அங்கு வாழ்ந்த பல்வேறு சாதியினர் கடலோரத்தை நோக்கி நகரத் தொடங்கியது பரதவர்களின் வாழ்க்கையில் கடும் விளைவை ஏற்படுத்தியது. ஆனாலும், அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மீன்வளச் சட்டம்: ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது அன்றைய சென்னை மாகாணம் இந்திய மீன்வளச் சட்டம் 1897-ஐ இயற்றியது. இந்த சட்டமே பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மீன்வளச்சட்டங்கள் இயற்றப்பட காரணமாய் அமைந்தது. கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை இந்த சட்டம் உறுதி செய்தது.

இந்த நிலையில்தான் கடந்த 40 ஆண்டுகளுக்குள் நாட்டுப்படகிலிருந்து மாறி மீனவ சமூகத்தின் வசதி மிக்க நபர்கள் மீன்பிடி விசைப்படகுகளை கடலில் இறக்கினர். அப்போது எழுந்த பல்வேறு சிக்கல்கள் கடந்த 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவர ஏதுவாயிற்று. தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டுதல் மற்றும் அவர்களின் நலன் பேணுதல் என்பதே கடந்த 2021-2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு மாறாக தங்களின் நலன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியிலுள்ள இடிந்தகரை, பெருமணல், கூத்தங்குழி, கூட்டப்புளி, தோமையார்புரம், கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, பஞ்சல் ஆகிய மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள், விசைப்படகு மீனவர்களால் கடும் பாதிப்பிற்கு ஆளாவதாக தொடர்ந்து மீன்வளத்துறைக்கு புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி இடிந்தகரை, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் வினோத் உள்ளிட்ட இரண்டு மீனவர்கள் விசைப்படகு மோதியதில் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியிலுள்ள மீனவ கிராமங்களில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் குறித்த தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அங்கீகாரம் இல்லாத விசைப்படகுகள்: மீனவர் அகிலன் கூறுகையில், "கடந்த மார்ச் 10-ஆம் தேதி வள்ளியூரில் இருதரப்பாருக்கும் இடையிலான சமுதாயக் கூட்டம் நடைபெற்றது. உதவி ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர், மீன்வள துணை இயக்குநர்கள் மட்டத்தில் பேசியபோது, ஒரு தலைமுறையாய் நடைபெறும் இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தரப்பு கோரிக்கையாக இருந்தது. கன்னியாகுமரியில் உள்ள விசைப்படகுகளில் 42-க்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 300க்கும் மேற்பட்ட படகுகளுக்கு அங்கீகாரமில்லை.

திருநெல்வேலி மாவட்ட எல்லைக்குள் அவர்கள் வரக்கூடாது என்பது எங்களது கோரிக்கை. இங்கு நாட்டுப்படகுகள் மட்டுமே உள்ளன. இதையே காரணமாகக் கூறியுள்ளோம். இதனை அதிகாரிகள் தரப்பில் ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், விபத்துக்கு காரணமான படகின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளோம்" என்கிறார்.

மீனவர் வினோத் தாக்குதலுக்கு ஆளான பிறகு மேற்கண்ட மீனவ கிராமங்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்றபோது, அச்சமயம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள், மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வைத்த வேண்டுகோளுக்காக மார்ச் 10-ஆம் தேதி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை நாட்டுப்படகு மீனவர்கள் கண்துடைப்பு முயற்சி என்றே கருதுகின்றனர்.

புகாருக்கு மதிப்பில்லை:ஜெரால்டு என்ற மற்றொரு மீனவர் கூறுகையில், "5 நாட்டிகல் மைல்(Nautical mile) தொலைவு எங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்குள் விசைப்படகு மீனவர்கள் வரக்கூடாது. ஆனால், தொடர்ந்து அவர்கள் அத்துமீறுகிறார்கள். எங்களது வலைகளை அறுத்தெறிந்து நாசம் செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் நட்டம் ஏற்படுகிறது. ஏதோ ஒரு சம்பவம் என்றால் நாங்கள் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் கடலுக்குச் செல்லும்போதெல்லாம் இப்படியொரு சிக்கல் ஏற்பட்டால் நாங்கள் எப்படி வாழ்வது? மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் கூட எங்களது புகாருக்கு மதிப்பில்லை" என்கிறார்.

மேலும், "தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை அமைத்துக் கொள்வதில்லை. குறைந்தபட்சம் 6 நாட்டிகல் மைல் தொலைவுக்கு அப்பால்தான் மீன் பிடிக்க வேண்டும் என்ற நடைமுறையையும் பின்பற்றாமல், நாட்டுப்படகுகளுக்கான எல்லைக்குள் மீன்பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் புறக்கணிப்பதற்கில்லை." என்றார்

எங்களையும் வாழ விடுங்கள்:சுரேந்தர் சிங் என்ற மீனவர் கூறுகையில், ”கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் மீன்பிடித் துறைமுகம் என்று அமைக்கப்பட்டதோ அன்றிலிருந்தே இந்தப் பிரச்சனைதான். கடலை நம்பி வாழ்கின்ற எங்களுக்கு இதுபோன்ற வாழ்வாதாரச் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. கூத்தங்குழியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போனார். இப்போது எங்கள் கிராமத்து மீனவர் தாக்கப்பட்டு தனது கையை இழந்துள்ளார். அதற்காக விசைப்படகு மீனவர்களை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்பதல்ல எங்கள் நோக்கம். பெருமளவு முதலீடு செய்திருப்பார்கள். அவர்களும் வாழ வேண்டும் நாங்களும் வாழ வேண்டும். இதற்கொரு வழியை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும்” என்கிறார்.

விசைப்படகுகளால் பவளப்பாறைகள் சேதம்:தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக பவளப்பாறைகள் இருக்கின்ற காரணத்தால் மீன் வளமும் மிக அதிகம். ஆகையால் பவளப் பாறைகளை காப்பாற்றுவதற்காக இங்கு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவில்லை. இந்த மீன் வளத்திற்கு ஆசைப்பட்டே விசைப்படகு மீனவர்கள் இப்பகுதிகளில் ஒழுங்குமுறையை மீறி அத்துமீறுவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே மீன்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. எல்லா மாதங்களிலும் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அத்துமீறுகின்ற விசைப்படகுகளால் இந்தப் பவளப்பாறைகள் கடும் சேதத்திற்கு ஆளாகின்றன. அதேபோன்று பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடல் வளத்தைப் பேணிக்காப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அதுபோன்ற அக்கறையெல்லாம் கிடையாது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

குடும்பத்தை யார் காப்பாற்றுவது: பாதிக்கப்பட்ட மீனவர் வினோத் கூறுகையில், ”நாங்கள் கடலுக்குள் வலையை எடுக்கப்போகும் நேரம்தான், அந்த விசைப்படகு அங்கு வந்தது. நாங்கள் 2 நாட்டிகல் மைல் தூரத்திற்குள் வந்து மீன் பிடிக்கலாமா என கேள்வி எழுப்பினோம். ஆனால், பேசிக்கொண்டிருக்கும்போதே எங்களது படகு மீது அவர்களது விசைப்படகை மோதினார்கள். இதற்குள் எங்கள் படகிலிருந்த 6 பேர் கடலுக்குள் விழுந்து தப்பித்துக் கொண்டனர். நான் கடலுக்குள் குதித்தபோது புரொபெல்லரில் சிக்கி எனது வலது கை ஒடிந்தது.

இந்த சம்பவம் நடக்கும்போது பிற்பகல் 3 மணி. என்னுடன் வந்த மீனவர்கள் என்னை தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். கைபோனது மாதிரி உயிர் போயிருந்தால் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவது யார்..? விசைப்படகு மீனவர்களால் உள்நோக்கத்தோடுதான் நாங்கள் தாக்கப்பட்டோம். என்னோடு இன்னொரு மீனவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

அரசு நல்ல முடிவை தர வேண்டும்: பாதிக்கப்பட்ட மீனவர் வினோத்தின் மனைவி பீமா கூறுகையில், ”எங்களது குடும்பத்தில் வருமானத்திற்கான ஒரே ஆதாரம் என் கணவர் மட்டுமே. நான்கு குழந்தைகள் உள்ளனர். நாங்கள் ஆறு பேரும் இவரது வருமானத்தில் மட்டுமே வாழ்ந்து வருகிறோம். இதற்குப் பிறகு நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை. உதவி செய்வதற்குக்கூட யாரும் இல்லை. தமிழக அரசிடம் நஷ்டஈடு பெற்றுத்தருவதாகக் கூறினார்கள். இனி அவர் வேலைக்குச் செல்வதற்கு இயலுமா என்பதுகூட தெரியவில்லை.

ஆறு மாதம் கழித்து கையில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். இவர் வேலைக்குச் செல்ல எத்தனை ஆண்டுகளாகும் என்பதும் தெரியவில்லை. எனக்கு எந்த வேலையும் தெரியாது. மீன்வளத்துறையின் வாயிலாக இதுவரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதுவரை அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு எங்களுக்கு நல்ல முடிவைத் தருவதோடு, என்னைப் போன்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும் உத்தரவாதம் தர வேண்டும்” என்கிறார்.

இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் அவைத்தலைவராகவும் உள்ள அப்பாவு, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து, தேவையான உதவிகள் செய்வதோடு, மீனவரின் மனைவிக்கு அரசுப் பணிக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளதாக சக மீனவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான எந்தவித உறுதிமொழிக் கடிதமோ, ஆணையோ வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இறந்தால் தான் இழப்பீடா?: தாக்குதலுக்கு ஆளான படகின் உரிமையாளர் ஹெல்மென் கூறுகையில், ”மார்ச் 1-ஆம் தேதி கடலுக்குள் சென்று வலையை விரித்துவிட்டு, மறுநாள் 2-ஆம் தேதி வலையை எடுக்கச் செல்லும்போது தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. வெறும் 2 நாட்டிகல் மைல் தொலைவிலேயே சின்ன முட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு அப்பகுதியில் அத்துமீறியது. வலையை சேதப்படுத்தக்கூடாது என்று எங்களது படகிலிருந்து நாங்கள் கத்தினோம். ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் படகை வேகமாக 20 மீட்டர் முன்னெடுத்து பிறகு எங்களது படகை நோக்கி செலுத்தியதோடு, இத்தோடு சாவுங்கள்... தொலைந்து போங்கள்..' என்று கூறிக்கொண்டே மோதினார்கள்.

அப்போது கீழே குதித்து தப்பிக்க முயன்று வினோத் கை ஒடிந்தது. ஆனால் காயம்பட்ட எங்களை அந்த விசைப்படகு மீனவர்கள் வேடிக்கை பார்த்தார்களே ஒழிய காப்பாற்ற முன்வரவில்லை. எங்களுக்கு அருகிலிருந்த நாட்டுப்படகு மீனவர்கள்தான் காப்பாற்றினார்கள். இந்த சம்பவத்தை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடலோர மீனவக் கிராமங்கள் அனைத்தும் போராட்டம் நடத்தின. எங்களை யாரும் வந்து சந்திக்கவேயில்லை. அப்போது நாகர்கோவிலுக்கு வந்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்க முயன்றபோது எங்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இறந்தாலோ அல்லது கை முற்றுமாக ஒடிந்தாலோதான் இழப்பீடு தருவோம் என்று கூறிவிட்டார்கள். எங்களைத் தாக்கிய படகுக்கு எந்தவித உரிமமும் கிடையாது. ஆனால் அவர்கள் 6 மாதங்கள் தொழிலுக்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுப்போம் என்று மட்டும் கூறியுள்ளனர்” என்கிறார்.

பாதிக்கப்பட்ட மீனவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எந்தவித இழப்பீடும் தரப்படவில்லை என்ற வேதனை இப்பகுதி மீனவர்களுக்கு உள்ள நிலையில், இது குறித்த வழக்கை தொடர்ந்து நடத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவோம் என்பதில் மிக உறுதி காட்டுகின்றனர்.

உலகமயமாதலுக்கு முன்பே துவங்கிய சிக்கல்: சமூக செயற்பாட்டாளர் பிரேவின் ராயன் கூறுகையில், ”தென்மாவட்டங்களில் உள்ள மீனவ சமூகம் பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளது. இந்திய நாட்டில் மீனவ சமூகத்தின் மக்கள் தொகை குறைவு. தமிழகத்திலும் அவ்வாறே உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மீனவ கிராமங்களில் அவ்வப்போது எழும் மோதல்கள் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாட்டுப்படகு மீனவர்களோடு முரண்படும் விசைப்படகு மீனவர்களால் இந்தச் சிக்கல் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இது இன்றோ அல்லது நேற்றோ உருவான பிரச்சனை அல்ல. 40 ஆண்டுகால சிக்கல். உலகமயமாக்கல் நிகழ்ந்த 1990-களுக்கு முன்பே மீனவ சமூகத்தில் 1970 வாக்கிலேயே நடைபெறத் துவங்கிவிட்டது. மீன் வளம் மற்றும் மீன் வளம் சார்ந்த நிலங்களெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சிகள் அப்போதே தொடங்கிவிட்டன. அதற்குப் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவு மீனவ மக்களை இக்கட்டான சிக்கலுக்குள் தள்ளியது.

தற்போது இந்தியாவில் நிறுவப்படும் அணு உலைகளானாலும் சரி, மேம்பாட்டுத் திட்டங்களானாலும் சரி, இந்திய ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் தென்மாவட்ட கடற்கரைகளே பலிகடாவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதி சார்ந்த மீனவ மக்களை எவ்வாறு மெதுவாக வெளியேற்ற வேண்டும் என்ற திட்டம் பல்வேறு வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சி மீனவர்களை சின்னாபின்னமாக்கும்.

இங்கு நிகழ்கின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுக்கு முயலாமல், அப்போதைக்கு தீர்ந்தால் போதும் என்ற மனநிலையிலேயே அதிகாரிகளும் செயல்படுகிறார்கள். தென்மாவட்டங்களில் உள்ள மீனவர்களில் 99 சதவிகிதம் பேர் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கத்தோலிக்க கிறித்தவ மதத்தை ஏற்றவர்கள். ஆகையால் இங்குள்ள திருச்சபைகள் மீனவ மக்களிடையே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆனால் திருச்சபையோடு அதிகார வர்க்கமும் கைகோர்த்துக் கொண்டு இயங்குகிறார்களோ என்ற ஐயம் இருக்கிறது. விசைப்படகு மீனவர்களுக்கான நடைமுறைகளை விதிமுறைகளை ஒழுங்காக அமல் செய்து, அதனைத் தொடர்ந்து கண்காணித்தாலே பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். பண்டைய காலம் தொட்டு கலாச்சாரம் மிக்க சமுதாயமாக வாழ்ந்து வரும் பரதவர் குலத்தைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாகத் திட்டமிட வேண்டும்” என்கிறார்.

பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்குமான பிரச்சனையில் தலையிட்டு இங்குள்ள திருச்சபைகள் இதுவரை எந்தவித தீர்வினையும் தருவதற்கு முன்வரவில்லை என்ற வேதனை மீனவ மக்களிடையே உள்ளது. மீனவர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாவதும் சில மீனவர்கள் உயிரிழந்திருப்பதையும் வெறுமனே வேடிக்கை பார்க்கிறார்களோ என்ற தங்களது குமுறலையும் வெளிப்படுத்துகின்றனர்.

திட்டமிட்டு மீனவர்கள் மீது தாக்குதல்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஜீஸஸ் கூறுகையில், ”நான் கடந்த 20 ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். அப்போதிருந்தே இந்தப் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மீன்வளத்துறையின் சார்பாக முதலில் கண்காணிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அத்துமீறும் படகுகளை முடக்கினார்கள். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்திலும் நாட்டுப்படகு மீனவர்களும் உள்ளனர். திருநெல்வேலியைப் போன்றே இங்கும் சிக்கல் உள்ளது.

இடிந்தகரை மீனவர் தாக்கப்பட்ட விவகாரம் வேண்டுமென்றே செய்த ஒன்றுதான். 3 மாதங்கள் விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்ய அனுமதி வழங்குகிறது அரசு. அதற்குள் பலகோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்வளங்களை அள்ளிச் சென்றுவிடுகிறார்கள். ஒரு விசைப்படகில் 20லிருந்து 25 பேர் செல்கின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கிடைக்கிறது. அப்படியென்றால் படகு உரிமையாளருக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.

கிடைக்கின்ற பங்கில் மீனவ தொழிலாளர்களுக்கு 35 சதவிகிதமும் முதலாளிக்கு 65 சதவிகிதமும் என பிரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால் அத்தோடு அவர்கள் நிறைவடைந்துவிடுவதில்லை. அத்துமீறி எங்களது வாழ்வாதாரத்தையும் பறிப்பது எந்த வகையில் நியாயம்?” என்கிறார்.

அதிகாரிகள் அலட்சியம்: இதுகுறித்து கன்னியாகுமரியிலுள்ள விசைப்படகு மீனவர்கள் மற்றும் அவர்தம் முதலாளிகளைச் சந்திக்க முயன்றபோது அவர்கள் மறுத்துவிட்டனர். அதேபோன்று மீன்வளத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது காலங்காலமாக இருக்கின்ற பிரச்சனை தான், ஆகையால் சரி செய்துவிடுவோம். இடிந்தகரை மீனவர் தாக்குதல் தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பாரிடமும் பேசி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட மீனவருக்கு அரசு தரப்பில் தர வேண்டிய இழப்பீடுகளைப் பெற்றுத்தருவதற்கு முயன்று வருகிறோம் என்றனர்.

உலக உயிரினங்களின் கருப்பையாகத் திகழும் கடலை நம்பி வாழும் தமிழக பரதவர் குலம் மிகப் பெரும் சிக்கலுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகு, விசைப்படகு என்று இந்த மீனவர்களைப் பிரித்தாலும், இவ்விரண்டிலும் அடித்தட்டு உழைப்பாளிகள் அனைவரும் ஒரே மீனவ சமூகம்தான். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த முரண், தற்போது நீரு பூத்த நெருப்பாக உள்ளது. இதற்கு தமிழக அரசு உடனடியாக நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தராவிட்டால், நாளை பூதாகரமாகக்கூடிய அறிகுறிகளும் தென்படுகின்றன. கடலில் நடக்கும் இந்த யுத்தத்தை தடுத்து நிறுத்தி நாட்டுப்படகு மீனவர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டியது அவசர அவசியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு நிமிடம் கூட ஆளுநராக இருக்க தகுதி இல்லாதவர் ஆர்.என்.ரவி - வேல்முருகன் எம்.எல்.ஏ விளாசல்!

Last Updated : Mar 16, 2023, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details