தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு - nellai latest news

3ஆவது, 4ஆவது உலைகளிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு
சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

By

Published : Sep 30, 2021, 5:27 PM IST

Updated : Oct 1, 2021, 9:23 AM IST

திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட முறை உற்பத்தி நிறுத்தப்பட்டு மோசமான முறையில் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணுவுலைகள் இயங்கிவருகின்றன.

இந்த அணு உலையால் கூடங்குளம், ராதாபுரம், சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குப் பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகும் இந்த அணுமின் நிலையம் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்

தற்போது, அதே வளாகத்திற்குள் மேலும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு அணுவுலைகள் அமைக்கும் பணியை தேசிய அணுமின் சக்திக் கழகம் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3, 4 அணுவுலைகள் செயல்படத் தொடங்கியதும் அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே சேமித்துவைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு ராதாபுரம் சட்டப்பேரவை திமுக உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருமான அப்பாவு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று ராதாபுரத்தில் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், “கூடங்குளம் அணு உலை கழிவை இங்கு வைக்கக் கூடாது என்று 2021 ஜூலை 20ஆம் தேதி அன்றே கூடங்குளம் அணுசக்திக் கழக அலுவலரிடம் மனு அளித்துள்ளேன்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது என்பதை ஒன்றிய அரசுக்கு கோரிக்கையாகத் தெரிவித்துள்ளேன். ஒன்றிய அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த இரு நாள்களுக்கு முன்பாக அருகில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு ராதாபுரம், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

எனவே இங்கு மேலும் அணு உலைகளை அதிகரித்தால் புற்றுநோய் பாதிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஒன்றிய அரசு இதனைப் பரிசீலிக்க வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் வசிக்காத பகுதியான பாலைவனம் போன்ற பகுதிகளில்தான் பொக்ரான் வெடிகுண்டு சோதனையை நடத்தினார்.

ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

இந்த மாதிரியான மக்கள் வாழத் தகுதியற்ற இடங்களில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட வேண்டும். இதனை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும். மக்கள் அதிகம் வாழும் கூடங்குளத்தில் அணுஉலை கழிவு மையம் அமைக்கப்பட்டால் மதுரை வரையிலும் அதன் பாதிப்பு இருக்கும்.

சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

அருகிலிருக்கும் மாநிலமான கேரளாவில் இதன் பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் வரை இது குறித்து மனு கொடுத்துள்ளேன். ஒன்றிய அரசிடமும் இதனைக் கோரிக்கையாக வைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : லாரி கவிழ்ந்து விபத்து: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Last Updated : Oct 1, 2021, 9:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details