திருநெல்வேலி: மழை வெள்ள காலத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ராதாபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட வறட்சியான பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் 2007-2008ஆம் ஆண்டு நதிநீர் இணைப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாய் ஆகிய நதிகளை இணைக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக 369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதற்கட்டமாக 214 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இதில் இரண்டு கட்ட பணிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில் நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் 17.09 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணியினை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று (ஆக. 5) தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ”கருணாநிதியின் கனவுத்திட்டமான தாமிரபரணியாறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நெல்லை-கன்னியாகுமரி சாலையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ரயில்வே பாலம் ஒன்றும் கட்டப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.
நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் கடலில் வீணாக கலக்கும் தண்ணீர் வெள்ளநீர் கால்வாய் வழியாக ராதாபுரம், சாத்தான்குளம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்படும். இதன்மூலம் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பயன்பெறும்.