திருநெல்வேலி:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா பகுதியில் சிப்காட் 3வது அலகு அமைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த நவம்பர் 2ஆம் தேதி விவசாயிகள் தடையை மீறி பேரணியாக சென்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் அருள் ஆறுமுகம் உள்பட ஏழு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அருள் ஆறுமுகம் தவிர மற்ற 6 பேர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருள் ஆறுமுகம் போராட்டத்தை தூண்டிவிட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியிருந்தார். அருள் ஆறுமுகம் ஐ.டி பணியை விட்டுவிட்டு விவசாயம் செய்து வருவதாகக் கூறப்பட்டது. அதேசமயம் செய்யாறு மேல்மா பகுதியில் அருள் ஆறுமுகத்துக்கு விவசாய நிலம் உள்ளதாகவும், விவசாயிகளின் அழைப்பின் பேரிலேயே போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
மேல்மா சிப்காட்டுக்கு எதிரான போராட்டத்தில் கைதான அருள் ஆறுமுகம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அருள் ஆறுமுகத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளி சுப. உதயகுமாரன் சிறையில் நேற்று சந்தித்துள்ளார்.
அருள் ஆறுமுகத்தைச் சந்தித்தது குறித்து சுப. உதயகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “பாளையங்கோட்டை சிறையினிலே... பாம்புகள், பல்லிகள் நடுவினிலே... அஞ்சாமல் இருக்கும் தோழர் அருள் ஆறுமுகம் அவர்களை இன்று காலையில் சந்தித்துப் பேசினேன். நல்ல உடல் நலத்துடனும், மனநலத்துடனும் இருக்கிறார்.