தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம்" புது ரூட்டில் பயணிக்கும் நயினார் நாகேந்திரன்.. அடுத்த திட்டம் என்ன?

அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது அவர், மத்திய அமைச்சர் பதவிக்கு ரூட் போடுவதை காட்டுவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் திடீர் கருத்தால் தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை காணலாம்.

நயினார் நாகேந்திரன்(கோப்புப்படம்)
நயினார் நாகேந்திரன்(கோப்புப்படம்)

By

Published : Apr 3, 2023, 7:11 AM IST

சென்னை: அதிமுகவில் 2001ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நயினார் நாகேந்திரன். அதே ஆண்டில் அவருக்கு மின்சாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வியடைந்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. 2016ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் தோல்வியடைந்தார்.

இதே போன்று ஏற்ற, இறக்கமாக சென்று கொண்டிருந்தது நயினார் நாகேந்திரனின் அரசியல் பயணம். 2016 டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பமான சூழ்நிலை காரணமாக 2017ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நயினார் நாகேந்திரன் விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த நயினாருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதோடு 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சீட்டும் வழங்கப்பட்டது. ஆனால் அங்கும் தோல்வியை தழுவினார். பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் அப்பதவியை ராஜினாமா செய்த போது, தலைவர் பதவிக்கு நயினார் கடுமையாக முயற்சி செய்தார்.

ஆனால் அந்த பதவி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே.அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அண்ணாமலை பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றது முதல் ஒரு சில தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பாஜகவின் சட்டமன்றக்குழு பதவியை நயினாருக்கு வழங்கி இருந்தாலும், கட்சிக்குள் அவருக்கு மரியாதை இல்லை என்ற குற்றச்சாட்டை பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஐ.டி விங்க் மாநில துணை செயலாளர் திலீப் கண்ணன் கூறியிருந்தார். பாஜகவில் சமீப காலமாக ஆடியோ விவகாரம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அண்ணாமலை ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என கூறி பல மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

அதில் முக்கியமாக பாஜகவின் மாநில பொறுப்பில் இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார். இதை பாஜகவில் உள்ள அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அதிமுக - பாஜக இரண்டு தரப்பில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. இதற்கு நயினார் நாகேந்திரன் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த சில மாதங்களாக 2024-ல் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டின்படி அண்ணாமலை பேசி வருகிறார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், "அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்" என அண்ணாமலை கூறியதாக பேசப்பட்டது.

இதற்கு அதிமுக தரப்பில், "அண்ணாமலை பக்குவப்பட வேண்டும். தனித்துப் போட்டி என்பது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து" என கூறினர். இதற்கு பாஜக தரப்பில் முதல் ஆளாக நயினார் நாகேந்திரனும், "அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற அண்ணாமலையின் நிலைப்பாடு அது அவரது தனிப்பட்ட கருத்து" என கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது எனவும் ஆனால் பாஜகவில் பயணிப்பதில் எந்த சிக்கலும், வருத்தமும் இல்லை என நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், "அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது. பாஜகவில் பயணிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஜெயக்குமார் என்னை அதிமுகவிற்கு அழைத்தார். நான் அதற்கு மறுத்து விட்டேன். எடப்பாடி பழனிசாமியும் என்னை அதிமுகவிற்கு அழைத்தார். எடப்பாடி பழனிசாமி என்னுடைய நெருங்கிய நண்பர். நான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் எனக்கு கீழ் இருக்கும் ஒரு துறையில் பணியாற்றினார். அப்போது இருந்து எடப்பாடி பழனிசாமி எனக்கு நண்பர். ஓபிஎஸ்ஸா, ஈபிஎஸ்ஸா என்று கேட்டால் நான் ஈபிஎஸ்ஸை தான் நான் ஆதரிப்பேன். அதிமுக, பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது" என கூறினார்.

நயினார் நாகேந்திரன் இது போன்று பேசியிருப்பது மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல, அதில் இருக்கும் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் அதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகின்றனர். நயினார் நாகேந்திரனும் அதற்கான முன்னெடுப்பை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில் அவர் அதிமுகவிற்கு செல்வது பலன் அளிக்காது என்றும் பாஜகவில் தற்போது சட்டமன்ற குழு தலைவராக இருப்பதால் இந்த சமயத்தில் இந்த முடிவை எடுக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "நயினார் நாகேந்திரனை பொறுத்தவரையில் அதிமுக என்னும் பெரிய கட்சியில் இருந்து பாஜகவிற்கு வந்ததால் பாஜக தன்னுடையது என்று நினைக்கிறார். 2024-ல் ராமநாதபுரம் தொகுதியில் சீட் வாங்குவதற்கு இதுபோன்று பேசுகிறார். 2024-ல் ராமநாதபுரம் தொகுதியில் வெல்லும் பட்சத்தில் மத்திய அமைச்சராகும் திட்டதில் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் பட்சத்தில் அண்ணாமலையை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறார். பாஜகவின் மாநில தலைவர் பதவிக்கு கடுமையாக முயற்சி செய்கிறார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய வகை தொற்று.. மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details