நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர், சுந்தரம். இவருக்கு முத்துகிருஷ்ணன், முத்து மணிகண்டன், செண்பகநாதன், செந்தில் முருகன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். சுந்தரம் தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
இந்த நிலையில் சுந்தரத்தின் நான்கு மகன்களும் அவரது தந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தரம், 'தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007'ன் கீழ் தனது மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அதன் பெயரில் அவரின் மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர், சுந்தரத்தின் மகன்கள் நான்கு பேரும் மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் சுந்தரத்தின் வங்கிக்கணக்கில் 2500 ரூபாய் ஜீவனாம்ச தொகையாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளார். ஆனால், முத்துகிருஷ்ணன் மற்றும் முத்துமணிகண்டன் ஆகிய இருவரும் மட்டுமே மாதந்தோறும் ஆட்சியர் உத்தரவுப்படி தனது தந்தை சுந்தரத்திற்கு 2500 ரூபாய் ஜீவனாம்ச தொகையாக கொடுத்து வந்துள்ளனர்.
மீதமுள்ள செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் ஜீவனாம்சத் தொகை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், அந்த மனு மீது கூடுதல் விசாரணை நடத்தியுள்ளார்.