தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 ஆயிரம் கோடியே இடியுது.. 14 கோடி இடியாதா? .. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை..

ஐந்தாயிரம் கோடியில் கட்டப்பட்ட விமான நிலையம் இடிந்து விழும் போது 14 கோடியில் கட்டப்பட்ட மேற்கூரை இடிந்து விழுவது ஒன்றும் தவறில்லை என்ற வகையில் வ உ சி மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு பேசியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 26, 2023, 7:53 PM IST

Updated : May 26, 2023, 10:19 PM IST

5 ஆயிரம் கோடியே இடியுது.. 14 கோடி இடியாதா? .. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை..

நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி பாளையங்கோட்டை சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 831 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கும் வீரவநல்லூர் மற்றும் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கும் ரூபாய் 608.95 கோடியில் அடிக்கல் நாட்டும் பணி ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மேற்கூறிய திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகம் முழுவதும் குடிநீர் இணைப்புகள் வழங்க ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டு ரூபாய் 14 ஆயிரம் கோடிக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

மீதமுள்ள தொகைக்கு அனுமதிக்காக காத்திருக்கிறோம். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக துரிதமாக பணிகள் நடந்து வருவதன் காரணமாக 26 வது இடத்தில் இருந்த தமிழகம் இந்திய அளவில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நகர்ப்புற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். கிராமப்புறங்களில் இருந்து ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களும் முடிவடைந்த பின்னர் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது முழுவதும் தடுக்கப்படும். குடிநீருக்கு முக்கியத்துவம் தந்து திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வ உ சி மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ரூபாய் 5 ஆயிரம் கோடி முதலீட்டில் சென்னை விமான நிலையம் கட்டப்பட்டது 126 முறை கண்ணாடிகள் சேதம் அடைந்தது. அதெல்லாம் கேள்வி கேட்பதில்லை.

வ உ சி மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு கட்டமைப்பில் சிறு தவறு நடந்திருக்கலாம் அதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்நிலையில் நெல்லையில் வ உ சி மைதானத்தின் கேலரி மேற்கூரை ஒன்று அடியோடு இடிந்து விழுந்த சம்பவத்திற்கு மூத்த அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் கூறிய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால், பணி தொடங்கிய மறுநாளே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டு பின்னர் திமுக ஆட்சியில் 14.95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்தம் மே 21 ஆம் தேதி அரை மணி நேரம் பெய்த மழையை தாக்கு பிடிக்க முடியாமல் வ உ சி மைதானத்தின் கேலரி மேற்கூரை ஒன்று அடியோடு இடிந்து விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக ஆள் நடமாட்டம் இல்லாத்தால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு பொதுமக்கள் இளைஞர்கள் நடை பயிற்சி விளையாட்டு பயிற்சி மேற்கொள்வது வழக்கம் அது போன்ற நேரங்களில் மேற்கூரை விழுந்திருந்தால் பலர் உயிரிழந்திருக்க கூடும் இது போன்ற சூழ்நிலையில் தாங்கள் தவறை மறைக்கும் வகையில் பிறர் செய்த தவறை சுட்டிக்காட்டி அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் கூறி இருக்கிறார்.

ஐந்தாயிரம் கோடியில் கட்டப்பட்ட விமான நிலையம் இடிந்து விழும் போது 14 கோடியில் கட்டப்பட்ட மேற்கூரை இடிந்து விழுவது ஒன்றும் தவறில்லை என்ற வகையில் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வஉசி மைதானம் மேற்கூரை இடிந்த விவகாரம் - சீரமைப்பு செலவுகளை ஏற்கும்படி ஒப்பந்ததாரருக்கு நோட்டிஸ்!

Last Updated : May 26, 2023, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details