நெல்லையில் நடிகர் விஜய்யை காண முண்டியடித்த ரசிகர்கள் திருநெல்வேலி: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய். இன்று (டிச.30) தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்தார்.
நெல்லை கேடிசி நகர் மாதா மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக, விமானத்திலிருந்து தொடர்ந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்குச் சென்றார். இந்த நிலையில், ரசிகர்கள் ஏராளமானோர் நடிகர் விஜய்யைக் காண்பதற்காக நிகழ்ச்சி நடைபெற்ற கேடிசி நகர் மாதா மாளிகையை நோக்கி படையெடுத்துள்ளனர்.
ஆனால் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட பொதுமக்கள் மட்டுமே நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் சுவுர் ஏறி குதித்தும் உள்ளே நுழைந்தனர். சரியாக 12.40 மணியளவில் விஜய் கார் மண்டபத்திற்குள் நுழைந்தபோது, இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள் காரை சூழ்ந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் காவலர்கள் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, நடிகர் விஜய்யின் கார் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பின்னர் பின்வாசல் வழியாக நடிகர் விஜய் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் முதல் தளத்திற்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து, சுமார் இரண்டரை மணி நேரம் அங்கிருந்து 1,500 பேருக்கும் தனித்தனியாக அவரே நிவாரண உதவிகளை வழங்கினார். அதுவரை ரசிகர்கள் மண்டபத்தின் நான்கு புறமும் நின்று கொண்டு, சுவரின் மீது ஏறியும் ஜன்னல் கதவை தட்டியும், உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர்.
இறுதியாக பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, விஜய் அதே பின்வாசல் வழியாக படியில் இறங்கியபோது அவரைக் காண ரசிகர்கள் அங்குமிங்கும் ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் கீழே விழுந்து காயமடைந்தனர். பிறகு நடிகர் விஜய் காரில் தூத்துக்குடிக்குச் சென்று, அங்கிருந்து அதே தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை சென்றார்.
இதையும் படிங்க:1,500 பேருக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய நடிகர் விஜய்.. தூத்துக்குடியில் உயிரிழந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!