திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் குளிக்கச் சென்று திரும்பியபோது, மது அருந்திக் கொண்டிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டதோடு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும், அந்த இரண்டு இளைஞர்களையும் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமான முறையில் அந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன், திருநெல்வேலி தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களும் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணையம், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளது.