திருநெல்வேலி:பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்க மகன் மாயாண்டி. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதுடன், வீட்டில் ஆடு மாடுகளையும் வளர்த்து வந்தார். தினமும் காலை நேரத்தில் ஆடு, மாடுகளை கலியாவூர் காட்டு பகுதியில் மேய்சலுக்கு கொண்டு செல்வதும் மாலையில் அவற்றை மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த நவ.11ஆம் தேதி மாலை சீவலப்பேரி கலியாவூர் சாலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் உயிரிழந்தார்.
விசாரணையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சீவலப்பேரி சுடலை கோயில் பூசாரி துரை என்ற சிதம்பரம் கொலை சம்பவத்தை தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சீவலப்பேரி சுடலை கோயிலை நிர்வகிப்பது தொடர்பாகவும் அங்கு கடைகள் நடத்துவது தொடர்பாகவும் கடந்த ஆண்டு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் கோயில் பூசாரி சிதம்பரத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதை தடுக்கச் சென்ற நடராஜர் பெருமாள் என்பவருக்கும் அப்போது அரிவாள் வெட்டு விழுந்தது. இக்கொலை சம்பந்தமாக சீவலப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.