ஆட்சியர் அலுவலகத்தில் கதறி அழுத பெண் திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மும்தாஜ். இவருடன் சேர்ந்து மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர். மும்தாஜ் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குடி பெயர்ந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி மும்தாஜ் உடன் பிறந்த சகோதரி ஒருவரின் மகளுக்கு அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சுபநிகழ்ச்சி நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மும்தாஜ், தனது குடும்பத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட மும்தாஜ், அவரது சகோதரர்களிடம் தனது சகோதரி மகள்களுக்கு நடக்கும் நிகழ்ச்சியில் சகோதரர்கள் என்ற முறையில் தாய்மாமன் முறை செய்யும் தாங்கள், தனது மகள்களுக்கும் தாய்மாமன் முறை செய்து குடும்பத்தில் இருக்கும் சொத்தில் உரிய பங்கு தரும்படி கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், மும்தாஜ் மற்றும் அவரது சகோதரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்னை என்பதால் வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளும்படி காவல் துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து மும்தாஜ் தனது இரண்டு மகள்களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் அறை அருகே திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், எதற்கும் உடன்படாமல் மும்தாஜ் கண்ணீருடன் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், என்னை அடிக்கிறார்கள் என்றும் கண்ணீர் விட்டு கதறினார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கும் மும்தாஜ் மற்றும் அவர்களது மகள்கள் உடன்படாமல் தொடர் போராட்டம் நடத்தியதால் வலுக்கட்டாயமாக மூவரையும் காவல் துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அப்போது மும்தாஜ் காவல் ஆய்வாளர் காலில் விழுந்து, தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகமே பரபரப்பான சூழலுக்கு மாறியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க மும்தாஜ் மற்றும் அவரது மகள்களை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனுவும் மும்தாஜ் தரப்பில் அளிக்கப்பட்டது. காதல் திருமணம் செய்ததால் தணக்கு சொத்து வழங்க மறுப்பதாகவும், உரிய சொத்தை தர கேட்டால் சகோதரர்கள் ஆட்களை வைத்து அடிப்பதாகவும் குற்றம் சாட்டி புகார் மனுவை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:அரசுப்பேருந்தை வழிமறித்து பைக்கில் அராஜகம் செய்த இளைஞர் - கண்டுகொள்ளுமா காவல்துறை?