திருநெல்வேலி: சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்ய, தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியும் துணைவேந்தர் நியமனம் செய்யும் குழுவில் இருக்கவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். அதற்கு தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், முதல் முறையாகப் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவரும் இந்தத் துணைவேந்தர் தேடுதல் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.
துணைவேந்தரை நியமிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதுதான் வழக்கம். ஆனால், இப்போது நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் அறிவிப்பை எதிர்த்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வாயிலில் இந்திய மாணவர் சங்க (Sudent Federation of India) நெல்லை மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஆளுநரின் உருவப்படம் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.