தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலியில் இன்று அவர் அளித்த பேட்டியில், ”சாத்தான்குளம் வியாபாரிகள் இருவரையும் காவல் துறையினர் படுகொலை செய்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் கொந்தளித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் வருங்காலங்களில் நடந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.
விக்கிரமராஜா - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் நேரடியாகச் சென்று இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்று புகார் மனு கொடுக்க இருக்கிறோம். ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது. சிறுசிறு இடையூறுகள் காரணமாக பல்வேறு இடங்களில் கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதை எந்த நிபந்தனையும் இல்லாமல் அகற்றப்பட வேண்டும். வரும் 30ஆம் தேதி ஊரடங்குக்கு பிறகு ஜூலை 1 முதல் நிபந்தனை இல்லாமல் கடைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவின்படி சாத்தான்குளம் தந்தை-மகன் உடல்கள் உடற்கூறாய்வு!