பொருநை பாயும் நெல்லையில், மக்கும் குப்பைகளை உரமாக்கி அதில் கரும்பு, வாழை உள்ளிட்டவைகளை விளைவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் இந்த தூய முயற்சி எப்படி முன்னெடுக்கப்படுகிறது? அவர்கள் அப்படி என்ன செய்கிறார்கள்,
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் இங்கு 170 மெட்ரிக் டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இதில் 102 டன் மக்கும் குப்பைகளும் 68 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளும் சேகரிக்கப்படுகின்றன. மக்காத குப்பைகளை தார்சாலை பயன்பாட்டிற்கு தனியாரிடம் விற்பனை செய்கின்றனர். மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் மொத்தம் 41 உரமாக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தூய்மைப் பணியாளர்களை கொண்டு மக்கும் குப்பைகள் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்பட்டு இயற்கை முறையில் உரமாக மாற்றப்படுகிறது.
அதாவது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள், உரமாக்கும் மையங்களுக்கு கொண்டு வந்து சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் எடைபோடுகின்றனர். பின்னர் அந்த குப்பைகளை தொட்டியில் உலர வைத்து தயிர் வெல்லம் கொண்டு 68 நாட்கள் ஊற வைக்கப்படுகிறது. பிறகு இயற்கை உரங்கள் சுத்தம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் இயற்கை உரங்கள் மூலம் செடிகள் விரைவில் வளர்வதுடன் அதிக விளைச்சலை கொடுப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 41 உரமாக்கும் மையங்களிலும் தூய்மைப் பணியாளர் மூலம் பசுமை பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.
கரும்புக்கு இனி படையெடுக்க வேண்டாம் நாங்களே அறுவடை செய்வோம்: தூய்மைப் பணியாளர்களின் அசத்தல் முயற்சி இந்த மையங்களுக்கு அருகிலேயே விவசாய பண்ணை அமைக்கப்பட்டு இயற்கை உரங்கள் மூலம் மரம், செடி, கொடிகள் வளர்க்கப்படுகிறது. குறிப்பாக கரும்பு, வாழை, தக்காளி, முள்ளங்கி, செம்பருத்தி, ரோஜா, பப்பாளி உள்ளிட்ட 36 வகையான மரம் செடிகள் வளர்க்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் பராமரித்துவருகின்றனர்.
அதேபோல் வீடுகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைப்புகள், வாகன டயர்களிலும் செடிகளை வளர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, புத்தர் சிலை அமைத்து அதன் மேல் பகுதியில் செயற்கை நீரூற்றால் அலங்கரித்துள்ளனர். இங்கு உற்பத்தி செய்யும் காய்கறிகளை தங்களுக்கு கிடைத்தது போக மீதமுள்ளவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு விதைகள் வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தூய்மைப் பணியாளர் குமார் கூறுகையில், “நாங்கள் மக்கும் குப்பைகளை உரமாக்கி அதன் மூலம் கரும்பு, வாழை, முள்ளங்கி, கீரை என பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். எங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் அதிக அளவில் கிடைக்கிறது. மக்களுக்கும் விலைக்கு கொடுக்கிறோம். இயற்கை உரம் அதிக விளைச்சலை கொடுக்கிறது. இயற்கை உரம் போட்டு செடிகளை வளர்ப்பதால் இரண்டு வாரங்களில் செடிகள் வளர்ச்சி அடைகிறது. அதுமட்டுமின்றி நாங்கள் கரும்பும் பயிரிட்டுள்ளோம். இது வரும் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை தயாராகிறது. பின்னர் இந்த கரும்பை அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கலுக்கு கொடுப்போம்” என்றார்.
காய்கறி வளர்ப்பு மட்டுமின்றி, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, கோழி வளர்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறோம் என்றார் தூய்மை பணியாளர் செல்லமுத்து. இப்படி பல முன்னெடுப்புகளை எடுக்கும் திருநெல்வேலி மாநகராட்சிக்கு புதிதாக ஐந்து உரமாக்கும் மையங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்கிறார் மாநகராட்சியின் மாநகர நல அலுவலர் சரோஜா.
இயற்கை உரங்கள் கொண்டு விவசாயம் செய்வதால், அதிக விளைச்சல் கொடுப்பதுடன் உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்படாது என்பதை இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இச்சூழலில் நெல்லை மாநகராட்சியில் இயற்கை உரம் கொண்டு பசுமை பண்ணை வளர்ப்பில் அசத்தி வரும் தூய்மைப் பணியாளர்களின் பணி அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க...'மாற்றத்திற்கான சரியான பாதையை தமிழருவி மணியன் தேர்ந்தெடுக்கவில்லை' - மூத்த பத்திரிகையாளர் மேனா உலகநாதன்!