திருநெல்வேலி: திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மான விளக்கப்பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக வழக்கறிஞர் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், 'திராவிட இயக்கம்தான் இனத்தையும் மொழியையும் காப்பாற்றும் கொள்கையுள்ள கட்சி. இந்தி எதிர்ப்பு என்பது திமுககாரனின் ரத்தத்தில் ஊறியது. முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அரசியலுக்கு வர காரணம் இந்தி எதிர்ப்புதான். தனது 14 வயதில் தமிழ் கொடியை கையில் ஏந்தி 94 வயதுவரை இந்தியை எதிர்த்தே மறைந்தவர், கருணாநிதி.
இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி 62 நாள்கள், பாளையங்கோட்டையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மும்மொழிக் கொள்கையை ஏற்ற மாநிலங்களில் இன்று அவர்களின் தாய் மொழி அழிந்து வருகிறது.
மக்களை ஏமாற்றி ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. இதற்கு ஒரு ஆளுநர் வேறு பணியாற்றுகிறார். நமது வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழ்நாடு திராவிட நாடு இல்லை என்கிறார். தமிழ்நாட்டை, அழிக்க முயற்சி நடக்கிறது.
ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் நடக்கிறது, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது எனப் புகார் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து கேட்கிறேன். உங்கள் ஆட்சியில் எல்ஈடி பல்பு வாங்கியது, துடைப்பம் வாங்கியது முதல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
இதுகுறித்து நானும், சபாநாயகரும் வழக்குத் தொடுத்துள்ளோம். மேலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் குட்கா விற்பனை செய்ததாக, நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, சிபிஐ-யை வைத்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயகாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. எனவே, நீங்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு போதைப்பொருள் விற்பனையில் பாஜகவினர்தான் ஈடுபடுகின்றனர் என்று குற்றம்சாட்டுகிறேன். உதாரணமாக 5 கோடி ரூபாய் மதிப்பில் சிக்கிம் மாநிலத்தில் ஹெராயின் போதைப்பொருள் துறைமுகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் பொருட்கள் எங்கே சென்றது எனத் தெரியவில்லை. துறைமுகம் யார் கையில் உள்ளது என்பது அனைவரும் அறிவார்கள். தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து கேட்கட்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்