சினிமா கேரவனில் வந்திறங்கி நீதிமன்றத்தில் கெத்து காட்டிய ராக்கெட் ராஜா திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. தென் தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் உதவியாளராக இருந்தார். வெங்கடேஷ் பண்ணையார் மறைவிற்குப் பிறகு ராக்கெட் ராஜா தென் மாவட்டத்தின் பிரபல ரவடியாக காவல்துறையால் அறியப்பட்டார்.
குறிப்பாக பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் அடிதடி வழக்குகளில் கைதாகி பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை காவல்துறை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். இது போன்று பரபரப்புக்கு சொந்தக்காரரான ராக்கெட் ராஜா பனங்காட்டுப்படை என்ற கட்சியை நிறுவி, அதன் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் நடமாடும் தங்க கடை என்ற பெயருக்கு சொந்தக்காரருமான ஹரி நாடார், ராக்கெட் ராஜாவுடன் இணைந்து இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டனர். அப்போது ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார், சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பெற்று தமிழ்நாடு முழுவதும் பனங்காட்டு கடை கட்சியை திரும்பி பார்க்கச் செய்தார்.
ஆனால் தேர்தல் முடிந்த சில நாட்களில் பண மோசடி வழக்கு ஒன்றில் ஹரி நாடார் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் ராக்கெட் ராஜாவும் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஓராண்டுகளாக சிறையில் இருந்து விட்டு, சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் காவல் நிலைய எல்லை பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ராக்கெட் ராஜா இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
இதையொட்டி ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் திரண்டனர். இந்த நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக ராக்கெட் ராஜா சினிமா நடிகர்களுக்கு பயன்படுத்தப்படும் பென்ஸ் கேரவனில் கெத்தாக வந்து இறங்கினார். இதனை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜரான ராக்கெட் ராஜாவுக்கு அடுத்த மாதம் 11 ஆம் தேதி நீதிபதி வாய்தா வழங்கினார்.
பின்னர் அவர் அதே கேரவனில் கிளம்பிச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராக்கெட் ராஜா,"2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பயணிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு என்ற நிலைப்பாடு இருக்காது. சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் நானே போட்டியிடுவேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது" என்று கூறினார்.
சுமார் அரை மணி நேரம் நீதிமன்ற நிகழ்வுக்காக பல ஆயிரக்கணக்கில் கேரவனை வாடகைக்கு எடுத்து வந்து பந்தாக் காட்டியது ராக்கெட் ராஜாவுக்கு இது புதிதல்ல. ஏற்கனவே 2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்ட போது ராக்கெட் ராஜாவும், ஹரி நாடாரும் முன்னணி அரசியல் தலைவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து கெத்துக் காட்டினர். அதன் தொடர்ச்சியாக இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்த ராக்கெட் ராஜா சினிமா கேரவனில் பந்தாவாக வந்து இறங்கியது குறிப்பிடத்தக்கது.
கேரவனின் பின்னணி என்ன...?ராக்கெட் ராஜா அவர் சார்ந்த குறிப்பிட்ட சமுதாய பிரச்சனைக்காகவே பெரும்பாலான குற்ற வழக்குகளில் ஈடுபடுகிறார். அவர் சார்ந்த சமுதாயத்திற்கு எதிர் சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் அவருடன் பலமுறை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலும் ராக்கெட் ராஜா ஜாமினில் வெளியே வந்தால் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்வார்.
அவர் மும்பையில் தான் அதிக நாட்கள் செலவிடுவதாக கூறப்படுகிறது. அதை போல் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமின் கிடைத்தால் வெளியில் வந்தவுடன், அவர் பாதுகாப்பு மட்டுமல்லாமல் அவரால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருப்பார்கள். எனவே பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி இன்று ராக்கெட் ராஜா சினிமா கேரவனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கேரவனின் வாடகை சுமார் 60 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிக வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன வசதிகள் இந்த கேரவனில் இருப்பதாகவும் யாரும் தன்னை பின் தொடர முடியாது என்பதால் அவர் கேரவனில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வெளியானது புஷ்பா2 படத்தின் ஃபகத் ஃபாசிலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!