திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு பகுதியைச் சேர்ந்தவர், ரவுடி நீராவி முருகன். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு மருத்துவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை அடித்த வழக்கில், நீராவி முருகனை திண்டுக்கல் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்குத் தகவல்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இன்று (மார்ச். 16) காலை தனிப்படையினர் நாங்குநேரியில் இருந்து களக்காடு சாலையில் உள்ள மீனவன்குளம் என்ற இடத்திற்குச் சென்றனர். அங்கு இனோவா காரில் பதுங்கி இருந்த நீராவி முருகனை காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா கைது செய்ய முயன்றார்.
அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்
அப்போது நீராவி முருகன் தனிப்படையினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, நீராவி முருகனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றார். நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.