கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு மார்ச் மாதம் இறுதியில் பிறப்பிக்கப்பட்டு, தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பால், மளிகை, மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டுமே இயங்கும் என அரசு தெரிவித்திருந்தது. இந்தக் கடைகளும் சமூக இடைவெளியுடன் காலை முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா தொற்று மாநகரப் பகுதிகளில் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் முழு ஊரடங்கு இன்று முதல் நான்கு நாள்களுக்கு கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகராட்சியில் 100 விழுக்காடு முழு ஊரடங்கு இன்றும், மே 3ஆம் தேதியும் கடைப்பிடிக்க மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டார்.